'அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள்'... 'அம்பானி வீட்டின் முன்பு கொரோனா பிபிஇ கிட்டோடு சுற்றிய நபர்'... தீவிரமாகும் விசாரணை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த மார்ச் 16-ஆம் தேதி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நாள் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் பிப்ரவரி 25-ஆம் தேதி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவுக்கு வெளியே வெடிபொருள்களைக் கொண்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக மலபார் மலையில் உள்ள அவரது இல்லத்தில் தனது அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார்.
இந்த வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மும்பை குற்றப்பிரிவின் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸை அதிரடியாகக் கைது செய்தது. மார்ச் 15-ஆம் தேதி இரவு மும்பை காவல் தலைமையகத்தில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவு (சிஐயு) அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை 4 மணிக்குதான் முடிந்தது எனச் சொல்லப்படுகிறது.
இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சோதனையின்போது வழக்கு தொடர்பான ஆவணங்கள், மடிக்கணினி, ஐ-பாட், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே இனோவா கார் ஒன்றைப் பறிமுதல் செய்து இருந்த நிலையில், சோதனையில் அதிகாரிகள் மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றையும் பறிமுதல் செய்ததாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காரின் உரிமையாளர் யார் என்று தேடப்பட்டு வருகிறார்.
இந்த கார் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு வெடிபொருள்களுடன் நிறுத்தப்பட்ட ஸ்கார்பியோ காரை பின்தொடர்ந்து வந்து, பின்னர் அதிலிருந்த டிரைவரை ஏற்றிச் சென்ற கார் என கூறப்படுகிறது. இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது என்ஐஏ விசாரணையில் மிக முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
முன்னதாக, சச்சின் வாஸின் குடியிருக்கும் தானேவில் உள்ள சாகெட் காம்ப்ளெக்ஸில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி-யிலிருந்து பதிவான காட்சிகள் காணாமல் போனது. முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட ஸ்கார்பியோ கார், அவரது வீட்டிற்கு அருகே கண்டுபிடிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வாஸின் வீட்டுக்கு வெளியே அந்த கார் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் தன்னை அடையாளம் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக, சிசிடிவி காட்சிகளை வாஸ் அழித்திருக்க முடியும் என்று என்ஐஏ சந்திக்கிறது. இதற்கிடையே முகேஷ் அம்பானி வீட்டருகே ஸ்கார்பியோ கார் இரவில் நின்றபோது, அதே தெருவில் சாலையில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்துகொண்டும் கொரோனா பாதுகாப்பு உடையான பிபிஇ கிட் உடையை அணிந்துகொண்டு சுற்றித்திரிந்துகொண்டு இருந்துள்ளார்.
இது போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் தானா என்ற விசாரணையிலும் என்ஐஏ அதிகாரிகள் இறங்கியுள்ளனர். வழக்கின் முக்கிய திருப்பமாக மும்பை காவல்துறையின் 7 உறுப்பினர்களின் வாக்குமூலங்களையும் என்.ஐ.ஏ பதிவு செய்துள்ளது. அவர்களில் ஏ.சி.பி நிதின் அலக்னூர், போலீஸ் இன்ஸ்பெக்டர் மிலிந்த் கதே, ஏபிஐ ரியாசுதீன் காசி, ஏபிஐ பிரகாஷ் ஹோவல் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் உள்ளனர். இவர்களின் ரியாசுதீன் காசி சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், "விசாரணையில் குற்றவாளி எனக் கருதப்படுபவர் தண்டிக்கப்படுவார், ஆனால் அவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் நிறுவப்படுவதற்கு முன்பு யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்" என்றார்.
மற்ற செய்திகள்