'பக்ரீத் பண்டிகை' ..'இந்து பெண்ணின் பிரேதம் சுமந்து'.. இஸ்லாமியர்கள் சொன்ன ஸ்லோகம்.. நாடே நெகிழ்ந்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 19 வயது பெண் சோனி. இவரின் தந்தை ஹேரிலால். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். தாய் இருதய நோயாளி. இவர்களால் சரிவர உடலை இயக்கி எழக்கூட முடியாத சோக நிலையில், சோனியின் குடும்பத்தை அவரது சகோதரர்தான் கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் அண்மையில் சோனிக்கு மலேரியா நோய்த்தொற்று ஏற்பட்டது; சிகிச்சைப் பலனின்றி இறுதியில் சோனி மரணமடைந்துவிட்டார். எனினும் சோனியின் சகோதரர் மிகவும் கஷ்டப்படுபவர் என்பதால், இறுதிச் சடங்கைக் கூட செய்ய முடியாமல் தவித்துள்ளார். இதுதெரிந்ததும், அருகருகே வீடுகளில் இருந்த முஸ்லீம் மக்கள் சோனியின் இறுதிச் சடங்கை இந்து சடங்கு முறைப்படி செய்து உதவ முன்வந்த நிகழ்வும் நெகிழவைத்துள்ளது.
சோனியின் இறுதிச் சடங்கை முழுவதுமாக கவனித்த இஸ்லாமிய இளைஞர்கள், ஊர்வலத்திலும் சோனியின் பிரேதத்தை தோளில் சுமந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்து சமய சடங்குப்படி, சோனியை சுமந்து செல்லும்போது, ராம் நாம் சத்யா ஹை என்கிற ஸ்லோகத்தையும் உச்சரித்தபடி சுமந்துசென்றுள்ளனர்.
சோனியின் உடலை தோளில் சுமந்து சென்ற ஷகீல் என்கிற இஸ்லாமியர் இதுபற்றி பேசும்போது, ‘வாழ்க்கையின் கடைசி என்பது மரணம்தான். ஆனால் சிறு சிறு முரண்களுக்குள்ளும் பிரச்சனைகளுக்குள்ளும் நாம் நமக்குள் போரடி பிரிந்து கிடக்கிறோம்’ என்று கூறியுள்ளார். எல்லாவற்றுக்கும் சம்பவம் நடந்த இந்த நாள்(ஆகஸ்ட் 12, இன்று), இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை என்பது இதில் மேலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.