“எங்கள தாண்டி அனுமன் கோயிலை தொடுங்க பாக்கலாம்?”.. பெங்களூரு கலவர இரவில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் கலவரம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் மனிதச் சங்கிலி அமைத்து அரணாக நின்று அனுமன் கோவிலை காத்துள்ள நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுதாக தகவல்கள் வெளியானதை அடுத்து நேற்று முன்தினம் பெங்களூரில் கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் 60 போலீசார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 3 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்து கோயில்களுக்கு போலீஸ் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு போடப்பட்டது. இதனிடையே ஷாம்புரா சாலையில் உள்ள அனுமன் கோவிலில் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் மனித சங்கிலி முறையில் கைகோர்த்து அரணாக நின்று உரிய நேரத்தில் கோயிலுக்கு பாதுகாப்பு அளித்ததால் அங்கு நடைபெறவிருந்த வன்முறை தடுக்கப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்பில் ஈடுபட்ட முஹம்மது காலித் கூறும்போது, “நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனுமன் கோயில் அருகே நின்றிருந்தனர். ஆட்டோவில் வந்த சிலர் கல் மூட்டையையும் கொண்டு வந்திருந்தனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகப் படும்படியாக இருந்ததால், நான் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களை உடனடியாக அழைத்து விவரத்தை தெரியப்படுத்தினேன். பின்னர் அனைவரும் மனிதச் சங்கிலி அமைத்து இரவு 11 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை கோயிலுக்கு பாதுகாப்பு அரணாக நின்றோம். பின்னர் அங்கிருந்து எங்களைப் பார்த்ததும் அந்த கலவர இளைஞர்கள் கலைந்து சென்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார். கலவர நேரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் சேர்ந்து அனுமன் கோயிலுக்கு காவல் அரணாக நின்ற புகைப்படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மற்ற செய்திகள்