'வாழ்க்கையை புரட்டி போட்ட நிகழ்வு'... 'தவித்து வந்த மும்பை மாணவிக்கு சென்னை இளைஞர் கொடுத்த மறுவாழ்வு'... நெகிழவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிலர் இறந்தும் மற்றவரை வாழ வைப்பது உண்டு. அந்த வகையில் மண்ணுக்குள் வீணாகச் செல்ல இருந்த தனது கைகள் மூலம் இளம்பெண் ஒருவருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார் சென்னை இளைஞர் ஒருவர்.
மும்பை குர்லா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மோனிகா மோரே. 23 வயதான இவர் கடந்த 2014ம் ஆண்டு காட்கோபர் ரயில் நிலையத்தில், மின்சார ரயிலில் ஏற முயன்ற போது தவறிவிழுந்து விபத்தில் சிக்கினார். ஒரு நிமிடத்தில் நடந்த இந்த கோரச் சம்பவம் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. இந்த விபத்தில் கல்லூரி மாணவியாக இருந்த மோனிகா தனது இரு கைகளையும் இழந்தார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்குச் செயற்கை கைகள் பொருத்தப்பட்டன. ஆனால் செயற்கை கைகளால் அவருக்குப் பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை. தனக்கான வேலையைச் செய்ய அவர் மற்றவர்களையே சார்ந்து இருந்தார்.
இது மனதளவில் அவருக்கு பெரும் சுமையாக இருந்தது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன் அவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு கைகளைத் தானமாக வழங்க யாரும் முன்வரவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். அவரது கைகளை மோனிகாவுக்குத் தானமாக வழங்க வாலிபரின் குடும்பத்தினர் முன்வந்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகள் தயாரான நிலையில், வாலிபரின் கைகள் விமானம் மூலம் பாதுகாப்பாக மும்பை கொண்டு வரப்பட்டது.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தயாராக இருந்த நிலையில், மோனிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வாலிபரின் கைகள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாகக் காலமாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலிருந்த மோனிகா, தற்போது கைகளை ஊன்றி படுக்கையிலிருந்து எழுந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு மோனிகா, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். மோனிகா அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் கை விரல்களை அசைக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
தனக்கு கைகள் கிடைத்துக் குறித்துப் பேசிய மோனிகா, ''இதற்காக நான் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன். கடைசியில் சென்னையைச் சேர்ந்த இளைஞரின் கைகள் எனக்குக் கிடைத்துள்ளது. விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் கைகளைக் கொடுக்க சம்மதித்த அவரின் குடும்பத்தினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கைகள் பொருத்தப்பட வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. ஆனால் தற்போது அவர் இல்லை. எனக்கு கைகள் கிடைக்க வேண்டும் என முயற்சி செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்