"ஆமா, நான் ஸ்காட்லாந்து 'பைலட்' தான் பேசுறேன்... 'இந்தியா'ல நிலம் வாங்கணும்... அதுக்காக..." - '4.7' கோடி அனுப்பிருக்கேன்னு சொல்லி... என்னோட '58' லட்சத்த ஆட்டைய போட்டுட்டான் சார்!! - கதறும் 'ஆசிரியை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை பகுதியை சேர்ந்த 69 வயதான பெண்மணி ஒருவர் ஃபேஸ்புக்கில் பழக்கமான நபர் ஒருவர், தன்னிடம் 58 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், ஃபேஸ்புக் மூலம் கடந்த மே மாதம் முதல் ஸ்காட்லாந்தை சேர்ந்த லியோ ஜேகப்ஸ் என்ற நபர் ஒருவருடன் சாட்டிங் செய்து வந்த நிலையில் தொடர்ந்து இருவரும் வாட்ஸ்ஆப் மூலமும் பேசி வந்துள்ளனர். அப்போது அந்த நபர், ஆசிரியையிடம் தான் பைலட்டாக பணிபுரிந்து வருவதாகவும், இந்தியாவில் நிலம் வாங்க தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்காக தான் சுமார் 4.7 கோடி ரூபாய் மற்றும் அதனுடன் கடிகாரம் மற்றும் பூக்களை இணைத்து ஆசிரியை பெயரில் விமானம் மூலம் கொரியர் செய்து வைத்துள்ளதாகவும், அந்த பணத்தை விமான நிலையம் சென்று வாங்கி கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியையிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார். அதே போல, தான் விரைவில் இந்தியா வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, அந்த ஆசிரியைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார். உங்களது பெயரில் பார்சல் ஒன்று விமான நிலையம் வந்து அடைந்துள்ளதாகவும், அதிக பணம் அதில் வந்துள்ளதால் அதனை பெற்றுக் கொள்ள நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய ஆசிரியை, தொடர்ந்து பலமுறை அந்த பெண்மணி அறிவித்த வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தி வந்துள்ளார்.
மொத்தமாக இதன் மூலம் 58 லட்ச ரூபாயை அந்த கணக்கிற்கு ஆசிரியை செலுத்திய நிலையில், சுங்கத்துறை அதிகாரி என பேசிய பெண் மற்றும் அந்த ஸ்காட்லாந்து நபர் ஆசிரியையிடம் தொடர்பை துண்டித்துள்ளனர். தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை, இதுகுறித்து போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
ஆசிரியை பணம் அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் அவர்களின் தொலைபேசி எண், ஐபி முகவரி மூலம் மோசடி செய்த நபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் இது போன்ற மோசடிகள் பல நடந்து வரும் நிலையில், மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்