அம்மா மேலயே புகார்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன குட்டி பையன்.. வீடியோவை பார்த்துட்டு அமைச்சர் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலத்தில் தனது அம்மா மீது சிறுவன் ஒருவன் புகார் கொடுக்க சென்ற வீடியோ சில தினங்களுக்கு முன்னர் சமூக வலை தளங்களில் வைரலானது. இந்நிலையில் அந்த சிறுவனுக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அம்மா மேலயே புகார்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன குட்டி பையன்.. வீடியோவை பார்த்துட்டு அமைச்சர் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்..!

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள தெத்தலை எனும் கிராமத்தில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் இங்குள்ள காவல் நிலையத்திற்கு ஒருவர் தனது மகனுடன் வந்திருக்கிறார். 3 வயதான அந்த சிறுவன் தனது அம்மாவை பற்றி புகார் அளிக்க வந்திருப்பதாக சொல்ல காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகளே ஆடிப்போய்விட்டனர்.

அந்த சிறுவனின் தந்தை அதிகாரிகளிடம் பேசுகையில்,"வீட்டில் அவனது அம்மா அவனை குளிப்பாட்டி கண்ணிற்கு மை இட்டுக்கொண்டிருந்த போது, சாக்லேட் கேட்டு அவரை தொந்தரவு செய்தான். இதனால் அவனது கன்னத்தில் செல்லமாக எனது மனைவி தட்டினாள். உடனே கோபப்பட்டுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டும் என என்னை அழைத்தான். நானும் வேறுவழியின்றி அழைத்துவந்தேன்" எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த காவல் நிலையத்தில் இருந்த அதிகாரி ஒருவர் சிறுவனிடம் புகாரை பெறுவதாக கூறி என்ன நடந்தது என கேட்டிருக்கிறார். அப்போது மழலை மொழியில் பேசிய சிறுவன்,"என்னுடைய சாக்லேட்களை எல்லாம் எனது அம்மா எடுத்துக்கொள்கிறார். அவரை ஜெயில்ல போடுங்க" என கூற, இதைக்கேட்டு மொத்த ஸ்டேஷனும் சிரித்திருக்கிறது.

இதனையடுத்து அங்கிருந்த அதிகாரி சிறுவனுக்கு ஆலோசனை கூறியுள்ளார். அப்போது, நல்ல எண்ணத்திற்காகவே அம்மா சில நேரங்களில் அவ்வாறு செய்வார் எனவும், அப்போது சினம் கொள்ளாமல் அம்மாவின் சொல்படி நடக்கவேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார். அதனை சமர்த்து பிள்ளையாக கேட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றிருக்கிறான் அந்த சிறுவன்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த வீடியோவை பார்த்திருக்கிறார். இதனையடுத்து அந்த சிறுவனுக்கு குட்டி சைக்கிள் மற்றும் சாக்லேட்களை பரிசாக வழங்கியுள்ளார் அமைச்சர். மேலும், அந்த சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலமாகவும் அமைச்சர் உரையாடியுள்ளார். அப்போது, சிறுவனின் குடும்பத்தினருக்கு தீபாவளி வாழ்த்துகளையும் அவர் தெரிவித்திருக்கிறார். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

 

MP, KID, COMPLAINT, MOTHER, MINISTER

மற்ற செய்திகள்