எனக்கு சம்பளம் வேண்டாம்.. மாஸ் உத்தரவு பிறப்பித்த கலெக்டர்.. சல்யூட் போட வைத்த காரணம்
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேசம்: தனக்கு சம்பளம் தர வேண்டாம் என கலெக்டர் ஒருவர் உத்தரவு பிறப்பித்துள்ளது, மக்களிடையே அதிகம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பொதுவாக அரசு அதிகாரிகள், வேலைகளை தாமதமாக தான் செய்வார்கள் என்ற ஒரு கருத்து, பொது மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. அதனை பொய் ஆக்கும் வகையிலான சம்பவம் தான், தற்போது அரங்கேறியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கலெக்டர் ஒருவர், மக்களின் புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை என தன் மீதே அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதிரடி கலெக்டர்
மத்தியப்பிரதேசச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் ஆட்சியராக செயல்பட்டு வருபவர் கரம்வீர் ஷர்மா. இந்நிலையில், அம்மாவட்டத்தில், முதலமைச்சர் ஹெல்ப்லைன் மூலம் நிறைய குறைகளை பொது மக்கள் பதிவிட்டுள்ளனர். ஆனால், இவற்றுள் பல புகார்கள் இன்னும் சரிவர விசாரிக்கப்படாமல் நிலுவையிலேயே உள்ளது.
உடனடி உத்தரவு
இந்த புகார்களை விசாரித்து தீர்வு வழங்க கால தாமதம் ஏற்பட்ட காரணத்தினால், டிசம்பர் மாதத்திற்கான தனது சொந்த சம்பளம் வேண்டாம் என ஆட்சியர் கரம்வீர் ஷர்மா உத்தரவிட்டுள்ளார். அதே போல, இது சம்மந்தப்பட்ட மற்ற சில அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள் மீதும் நடவடிக்கை
இது தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தனது சம்பளம் மற்றும் சில அதிகாரிகள் சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என கருவூல அதிகாரிக்கு கரம்வீர் ஷர்மா உத்தரவிட்டுள்ளார். 100 நாட்களுக்கு மேல் ஆகியும், புகார்களை எந்த அதிகாரிகள் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையோ, அந்த அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தான் முக்கியம்
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, முதலைமைச்சர் ஹெல்ப்லைனில் நிலுவையிலுள்ள புகாரினை, துறை வாரியாக கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு தான், இந்த உத்தரவினை அவர் பிறப்பித்தார். எந்த புகாரும் கவனிக்கப்படாமல், போய் விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்' என தெரிவித்தார்.
அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
மேலும், வருவாய்த் துறை அலட்சியம் காரணமாக தாசில்தார்களுக்கும், துணை நகராட்சி ஆணையர்களுக்கும், திட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கும் அகவிலைப்படியை நிறுத்தி வைக்குமாறும், கலெக்டர் கரம்வீர் ஷர்மா உத்தரவிட்டுள்ளார். அதே போல, மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்திற்கு வரமால் போன அதிகாரிகளுக்கும், காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சபாஷ் கலெக்டர்
தன்னால், குறிப்பிட்ட சமயத்தில், பொது மக்களின் குறையைக் கேட்டு ஆய்வு செய்ய முடியாமல் போனதற்காக, தனக்கு சம்பளம் வேண்டாம் என மாவட்ட கலெக்டரே தெரிவித்திருப்பது, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், அரசு அதிகாரிகள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என கலெக்ட்ர் கரம்வீர் ஷர்மாவை உதாரணமாக தெரிவித்தும் வருகின்றனர்.
மற்ற செய்திகள்