'அவன் ஒண்ணும் 90% எடுக்கல... ஆனா'... வைரலாகும் தாயின் 'இன்ஸ்பிரேஷ'னல் ஃபேஸ்புக் பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகனின் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு குறித்து தாய் ஒருவர் இணையத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தற்போதுதான் 10, 11 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தாலும், நினைத்த பாடம் மற்றும் நினைத்த கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிக அளவில் வருத்தப்படுவது உண்டு. அந்த அளவிற்கு மதிப்பெண்கள் மீதே கவனம் இருக்கும்.
ஆனால் இங்கு ஒரு தாய், தனது மகன் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில், 60 சதவிகித மதிப்பெண்களே பெற்றிருந்தாலும் தனது மகனை பாராட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள போஸ்ட் வைரலாகியுள்ளது. வந்தனா சூஃபியா கட்டோச் என்ற அந்த தாய் தனது ஃபேஸ்புக் பதிவில், '10 வகுப்பு தேர்வில் எனது மகன் 60 சதவிகித மதிப்பெண்களை பெற்றுள்ளான். உண்மையில் மிகவும் பெருமையாக உள்ளது. 90 சதவிகித மதிப்பெண்கள் எனது மகன் எடுக்கவில்லைதான். இருந்தாலும் இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
ஏனென்றால் சில பாடங்களை படிப்பதற்கு அவன் பட்ட கஷ்டங்கள் ஏராளம். அதனை நேரில் பார்த்திருக்கிறேன். முதலில் சில பாடங்களை படிக்க முடியாது என்றே என் மகன் நினைத்துவிட்டான். ஆனால் தேர்வுக்கு கடைசி ஒன்றரை மாதத்திற்கு முன்பாக விடாமல் முயற்சி செய்து, இப்போது இந்த மதிப்பெண்களை பெற்றுள்ளான். நீங்கள் விரும்பிய வழியில் பயணித்து விரும்பியதை செய்யுங்கள். நகைச்சுவை கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் மறக்காதீர்கள்' இவ்வாறு அந்த பதிவு செல்கிறது.
கடந்த 6-ம் தேதி 10 வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுக்குப் பின், தனது ஃபேஸ்புக் தளத்தில் இரு மகன்களுக்கு தாயான வந்தனா பதிவிட்டுள்ளார். பதிவிட்டுள்ள 2 நாட்களில் ஏகப்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது இந்தப் பதிவு.