'போதி தர்மர்' பத்தி'...'மோடியும் ஜின்பிங்'கும் என்ன பேசுனாங்க'?...வெளியான தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா, சீனா இடையேயான வர்த்தகம் மற்றும் போதி தர்மர் குறித்து பேசிய தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்திருக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி விருந்து அளித்து உபசரித்தார். பின்னர் இரண்டு மணி நேரம் இரு தலைவர்களும் சந்தித்து பேசி கொண்டார்கள். அப்போது வெளியுறவு துறை அதிகாரிகள் உடனிருந்தனர். திட்டமிட்ட நேரத்திற்கு மேல் இரு தலைவர்களும் பேசி கொண்டதால், இரு தலைவர்களும் பேசி கொண்ட விஷயங்கள் குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் தலைவர்களின் சந்திப்பு முடிந்த பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், '' இரு தலைவர்களும் வெளிப்படையாகவும், மிகுந்த அன்போடும் பேசி கொண்டதாக கூறினார். மேலும் அடுத்த நான்கரை ஆண்டுகளும் இரு தலைவர்களும் இணக்கத்துடனும், செயல்பட்டு அனைத்து பிரச்சனைகளிலும் சுமுகமாக தீர்வு ஏற்பட உழைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்ததாக அவர் கூறினார்.
இதனிடையே 'போதி தர்மர்' குறித்து பேசிய இரு தலைவர்கள், பல்லவர் காலத்தில் இருந்தே சீனாவுடன் இருந்த வர்த்தக உறவுகள் இருந்த நிலையில், தமிழகத்திலிருத்து கடல் வழியே சென்று சீனா மற்றும் ஜப்பானிற்கு போதி தர்மர் சென்றது குறித்து பேசியதாகவும் வெளியுறவு துறை செயலாளர் குறிப்பிட்டார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் அதுகுறித்து எதிர் நோக்கியிருக்கும் சவால்கள் குறித்தும் இரு தலைவர்கள் விவாதித்துள்ளார்கள்.
இதற்கிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க இச்சந்திப்பிற்காக தமிழக அரசு செய்திருந்த ஏற்பாடுகளை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பராட்டியதாக கோகலே கூறினார்.