'பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்'... 'சத்தியமா நான் எதிர்பாக்கல'... உருகி நின்ற இந்த நபர் யார்?
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது மகளின் திருமணத்திற்கு அழைத்த ரிக்ஷா தொழிலாளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் ரிக்ஷா ஓட்டும் தொழில் செய்பவர் மங்கல் கெவத். இவர் பிரதமர் மோடியால் தத்து எடுக்கப்பட்ட டோம்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்.இதனிடையே மங்கல் தனது மகளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அப்போது மோடியின் மீது அதிகப் பற்று கொண்ட மங்கல், தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழைப் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு திருமண வேலைகளில் பிஸியாக இருந்த மங்கலுக்கு, பிரதமர் மோடியிடமிருந்து வாழ்த்துக்கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் திருமண பெண்ணிற்கும் அவரது குடும்பத்திற்குத் தனது வாழ்த்துகளையும் ஆசீர்வாதத்தையும் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இதனைச் சற்றும் எதிர்பாராத அவர், மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.
இது குறித்து மங்கல் கெவத் கூறுகையில், ''நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. திருமண அழைப்பிதழை டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கும் வாரணாசியில் உள்ள அவரது அலுவலகத்திற்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பினேன். ஆனால் அவரிடமிருந்து பதில் வரும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை'' என கூறினார்.
இந்நிலையில் வாரணாசிக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மகளின் திருமணத்திற்கு அழைப்புக்கடிதம் அனுப்பிய ரிக்ஷா தொழிலாளியை நேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தார். அப்போது, மங்கல் கெவத்தின் குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தார்.
தூய்மை இந்தியா இயக்கத்துக்காக ரிக்ஷா ஓட்டுநர் மங்கள் கேவத்தின் பங்களிப்புக்காகப் பிரதமர் மோடி அவரைப் பாராட்டினார். மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட மங்கள் கேவத் தன் கிராமத்தில் கங்கை ஆற்றுக் கரையைத் தானே சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.