திடீரென வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள்!... காரணம் அறிந்து அதிர்ந்து போன காவல்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாசூரத்தில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்ட 80 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
![திடீரென வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள்!... காரணம் அறிந்து அதிர்ந்து போன காவல்துறை! திடீரென வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள்!... காரணம் அறிந்து அதிர்ந்து போன காவல்துறை!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/migrant-workers-in-surat-riot-ahead-of-not-tasty-food-in-camps-thum.jpg)
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு வெளியானதும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அப்படி செல்ல முடியாதவர்கள் பலர், வேலை செய்த மாநிலங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வேலை இழந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு அரசு சார்பிலும் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி, வீதிகளில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க கோரி போராட்டம் நடத்திய அவர்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். டயர்களையும், பல்வேறு காய்கறி வண்டிகளையும் தீவைத்து கொளுத்தினர். இதனால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. வன்முறை போராட்டம் தொடர்பாக 80 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதுபற்றி துணை கமிஷனர் படேல் கூறுகையில், 'நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தெருக்களில் வந்து போராட்டம் நடத்தினர். சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினர். மேலும், அவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் உணவு டேஸ்ட்டாக இல்லை என்று குற்றம்சாட்டினர். அந்த சாப்பாட்டை வாங்குவதற்கு வரிசையில் நிற்க வேண்டியிருப்பதாகவும் குறை கூறினர்' என்றார்.