சிறப்பு ரெயிலில் உயிரிழந்த 'தொழிலாளர்'... '8 மணி' நேரம் உடன் பயணித்த சக 'பயணிகள்'... அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு காரணமாக வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளிகள் சொந்த ஊர் செல்வதற்காக பல்வேறு மாநிலங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு சென்ற ஷ்ராமிக் ரெயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம், மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் புத்தா பாரிக்கர். இவர் ராஜஸ்தானிலுள்ள உணவகம் ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவருடன் அவரின் மைத்துனர் ஒருவரும் அதே உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். அப்படி இருக்கையில், கொரோனா பரவலின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக இருவரும் வேலையிழந்துள்ளனர். சொந்த ஊருக்கு செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அனைத்தும் வீணான நிலையில் கையில் இருந்த பணமும் தீர்ந்துள்ளது.
இந்நிலையில், சிறப்பு ரெயில் மூலம் தங்களது சொந்த ஊர் செல்ல புத்தா மற்றும் அவரது மைத்துனர் முடிவெடுத்த நிலையில் கடந்த 29 - ம் தேதியன்று இருவரும் ஷ்ராமிக் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அப்போது இரவு 10 மணியளவில் புத்தா பாரிக்கர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக, அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள் பீதியில் உறைந்து போன நிலையில், அவர் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்திருக்க கூடுமோ எனவும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று காலை சுமார் ஆறு மணியளவில் ரெயில், மால்டா மாவட்டம் வந்தடைந்தது. உடனடியாக அங்கு விரைந்த மருத்துவர்கள் சோதனைக்கு பின் உடலை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக பாரிகருக்கு நோய் ஒன்று இருந்துள்ளது என்றும், அதற்கு ரெயிலில் அவர் மாத்திரை எடுத்துள்ளதாகவும் ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பாரிக்கருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மற்ற செய்திகள்




