புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்ட மனைவி.. புகைப்படத்தை பகிர்ந்து கணவர் போட்ட பதிவு.. "படிச்ச எல்லாருமே கண் கலங்கிட்டாங்க"
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது, இணையத்தில் ஏதாவது மிகவும் மனமுருக வைக்கும் நிகழ்வு அல்லது சம்பவம் தொடர்பான விஷயங்கள், அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனமுடைய வைக்கும்.
அப்படி ஒரு Linkedin பதிவு தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
பாபர் ஷேக் என்ற நபர் ஒருவர், தன்னுடைய Linkedin சமூக வலைத்தளத்தில் புற்றுநோயுடன் போராடும் தனது மனைவி பற்றி உருக்கமாக சில கருத்துக்களை எழுதி பகிர்ந்துள்ளார்.
பாபர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த ஜனவரி மாதம், ஆறாம் தேதி எனது மனைவி ஜஹாராவின் மார்பில் ஒரு கட்டி போல இருப்பதை அறிந்து கொண்டோம். இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனை அழைத்து சென்ற பிறகு, இரண்டு வாரங்களாக மீண்டும் மீண்டும் செக்கப், ஸ்கேன் என பரபரப்பாகவே இருந்தது. அதன் பின்னர் சந்தேகப்பட்டது போலவே மனைவி ஜஹாராவுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது. அதுமட்டுமில்லாமல், அவர் புற்றுநோய் பாதிப்பில் இரண்டாவது நிலையிலும் இருந்தார். இதன் பின்னர் ஏராளமான கவலைகளும் குழப்பங்களும் எங்களை சூழ்ந்து கொண்டது. ஆனாலும் புற்றுநோய் உடன் போராட வேண்டும் என்ற மனநிலையை நாங்கள் தயார்படுத்திக்கொண்டோம்.
என்னுடைய பதிவு என்பது வெறும் புற்றுநோய் பற்றியது மட்டும் கிடையாது. மனைவி ஜஹாரா முழு நேரமாக பிசினஸ் செய்து வந்தவர். சமீபத்தில் தான் நான், புதிதாக ஒரு வேலையில் சேர்ந்தேன். அப்படி ஒரு சூழலில் தான் இந்த மாதிரியான விஷயம் நடைபெற்றது. இதனால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நாங்கள் நிறைய சிரமப்பட்டோம். அதற்கேற்ற வகையில் எங்கள் அன்றாட நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டோம். மறுபக்கம் சிகிச்சை, ஸ்கேன், உணவு, தூக்கம் என பம்பரமாக சுழன்றும் வந்தோம்.
புற்றுநோய் ஜஹாராவை உடல்ரீதியாக பாதித்ததே தவிர, மனரீதியாக எதுவும் செய்யவில்லை. இதனால், மனதைரியத்துடன் அன்றாட வாழ்க்கையை எப்போதும் போல நகர்த்தினார். பிசினஸையும் விட்டு விடாமல், பழைய உத்வேகத்துடனும் பணிகளைக் கவனித்து வந்தார். இதனால் தொழிலும் நல்ல முன்னேற்றம் கண்டது.
இங்கே நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என விரும்பும் விஷயம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வு ரீதியாக ஒரு ஆதரவு தேவை என்பதை தான். அப்படி ஒரு ஆதரவு குடும்பத்தில் இருந்து கிடைக்கும் போது புற்றுநோயுடனான போராட்டம் எளிதாகிறது. ஜஹாராவுக்கு எங்கள் குடும்பம், நண்பர்கள், அவருடைய அலுவலக நண்பர்கள் மற்றும் எங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் கூட ஆதரவும் அன்பும் கொடுத்தனர். அனைத்து வழியிலும் இருந்து கிடைத்த ஆதரவு மற்றும் அன்பின் மூலம், ஜஹாரா எப்போதும் போல பயணித்துக் கொண்டிருக்கிறாள்" என அவரது கணவர் பாபர் ஷேக் மிகவும் உருக்கமாக தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவி குறித்து கணவர் போட்ட Linkedin பதிவு, தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு வாழ்க்கையே முடங்கிப் போனது போல இருக்கும் பலரது மத்தியில், அவர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக ஜஹாரா விளங்குகிறார்.
Also Read | "ஆத்தாடி, வசூல் ஆனது மட்டும் இத்தன கோடியா?".. அமர்க்களமாக நடந்த "மொய் விருந்து".. களைகட்டிய 'நெடுவாசல்'!!
மற்ற செய்திகள்