'செல்லாது.. செல்லாது..' 2 வருஷத்துக்கு பின் ரயில்வேயிடம் இருந்து 33 ரூபாயை திரும்பப் பெற்ற இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த 30 வயது பொறியாளாரான சுஜித் ஸ்வாமி, கடந்த 2017-ஆம் ஆண்டு கோட்டாவில் இருந்து டெல்லி செல்வதற்காக முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை, அதன் பின்னர் சில காரணங்களால் கேன்சல் செய்துள்ளார்.

'செல்லாது.. செல்லாது..' 2 வருஷத்துக்கு பின் ரயில்வேயிடம் இருந்து 33 ரூபாயை திரும்பப் பெற்ற இளைஞர்!

அதனால் அவரது டிக்கெட் கட்டணமான 765 ரூபாயில், சேவைக்கட்டணம் போக மீதம் 665 ரூபாய் அவரது வங்கிக்கு ரிட்டர்ன் வந்திருக்கிறது. ஆனால் நியாயமாக அவருக்கு 65 ரூபாய்தான் பிடித்தம் பண்ணியிருக்க வேண்டும். மீதமுள்ள 35 ரூபாயை ஏன் தனக்கு அளிக்கப்படவில்லை என்று விசாரிக்கக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான தகவல் ஆணையத்தில் சுஜித் மனு  கொடுத்தார்.

இதற்கு பதில் அளித்த ரயில்வே நிர்வாகம், சுஜித் டிக்கெட் பதிவு செய்தபோது ஜிஎஸ்டி இல்லை என்றும், பின்னர் ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதாகவும் அதனால் ஜிஎஸ்டிக்கான கட்டணம் 35 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாகவும் கூறியது. ஆனால், சுஜித்தோ, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதற்கு முன்பே டிக்கெட் எடுத்த ஒருவருக்கு எப்படி ஜிஎஸ்டி பிடிக்கலாம்? என்று விடாமுயற்சியுடன் பல இடங்களில் அழுத்தம் தந்திருக்கிறார். ஒரு வழியாக சுஜித்துக்கு மறுவிளக்கம் கிடைத்தது.

அதன்படி, முதலில் ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி கட்டணத்துடன் சேர்த்து சுஜித்துக்கு 100 ரூபாய் பிடிக்கப்பட்டதாகவும், பிறகு ஜூலை 11- ஆம் தேதி தங்களது முடிவை மாற்றிக்கொண்டு ரயில்வே நிர்வாகம் 65 ரூபாயை திருப்பி அனுப்பியதாகவும், ஆக ஜிஎஸ்டிக்கு முன்பே டிக்கெட் புக் செய்த சுஜித்திடம் இருந்து ஜிஎஸ்டி வசூல் செய்யும் தங்களுக்கு இல்லை என்றும் விளக்கம் அளித்ததோடு, அவரது மீதிப்பணம் 35 ரூபாயை கடந்த வாரமான மே 1- ஆம் தேதி , சுஜித்தின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்து, இன்றைய தேதிக்கான ஜிஎஸ்டியாக 2 ரூபாயை பிடித்துக்கொண்டு 33 ரூபாயை செலுத்தியுள்ளது.

இதுபற்றி பேசிய சுஜித், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளிக்கப்பட்ட தனது மனு ஏறக்குறைய 8 துறைகளுக்கு மாறி மாறி கடைசியில் தனக்கான 33 ரூபாய் கிடைத்ததாகவும், ஆனால் இந்த பணத்துக்காக தான் கேட்கவில்லை என்றும் இதேபோல் அந்த நாளில் ஜிஎஸ்டி குழப்பத்தால் 9 லட்சம் பயணிகளின் 3.34 கோடி ரூபாய் பணம் ரயில்வே துறைக்குச் சென்றுவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தான் தெரிந்துகொண்டதாகவும், அதற்கான விழிப்புணர்வாகத்தான் இதைச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.