தனியார் மருத்துவமனையால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞர் புதைப்பதற்கு முன் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவைச் சேர்ந்த முகமது பர்கான் (20) ஜூன் 21ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை அடக்கம் செய்வதற்காகக் கொண்டு சென்றுள்ளனர்.
அடக்கம் செய்யும் இடத்துக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உடலில் லேசான அசைவு இருப்பதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உடலில் உயிர் இருப்பதை உறுதி செய்துள்ளர்.
ராம் மனோகர் லோகியா மருத்துவர்கள் கூறும்போது, “பர்கான் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார். ஆனால் அவருடைய மூளை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் சரியாகவே இருக்கிறது. வென்டிலேட்டர் துணையுடன் சிகிச்சை அளித்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.