‘உயிரோட இருக்குறது குடும்பத்துக்கே தெரியாது’.. 45 வருச வைராக்கியம்.. வேலைக்காக ‘வெளிநாடு’ போனவருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிமான விபத்தில் இறந்துவிட்டதாக நினைத்த நபர் 45 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைய உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் சாஸ்தம்கோட்டாவைச் சேர்ந்தவர் சஜித் துங்கல். இவர் கடந்த 1974-ம் ஆண்டு அபுதாபில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சஜித் துங்கலுக்கு வயது 22. அங்கு சென்றபின் கலை ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட அவர், மலையாள திரைப்படத் திரையிடல்கள் மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள், பாடகர்களை இணைத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த சூழலில், கடந்த 1976-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது கலைக் குழுவினருடன், பம்பாயில் இருந்து சென்னைக்கு (மெட்ராஸ்) விமானத்தில் பயணத்துள்ளார். ஆனால் விமான புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சஜித் துங்கல் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் நினைத்துள்ளனர்.
ஆனால் உண்மையில் அவர் உயிரிழக்கவில்லை. அவர் பம்பாயிலேயே வசித்து சொந்த தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. கடைசியில் பிழைப்புக்காக கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ‘எனது குடும்பத்தை தொடர்பு கொள்ளாததற்கு காரணம், நான் வாழ்வில் தோல்வியடைந்தவனைப் போல் உணர்ந்தேன்’ என கூறியுள்ளார். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என சஜித் துங்கல் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இப்படியே 45 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்த சமயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அதிர்ஷ்டவசமாக அவரது நண்பர் ஒருவரால் மோசமான நிலையில் சஜித் துங்கல் மீட்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து மும்பையில் உள்ள பாஸ்டர் கே.எம்.பிலிப் என்ற விடுதியில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பு காணாமல் போனவர்களை அவர்களது குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் சேவையில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
இதனை அடுத்து கோட்டயத்தில் உள்ள மசூதியில் சஜித் துங்கல் குடும்பத்தினர் குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். அப்போது மசூதி இமாமுக்கு, அவரது குடும்பம் பற்றி தெரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மூலம் வீடியோ காலில் சஜித் துங்கலை அவரது குடும்பத்தினருடன் பேச வைத்துள்ளனர். ஆனால் உணர்ச்சிவசப்பட்டதால் அவரால் பேச முடியவில்லை. தற்போது அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்லும் முயற்சிகள் கொள்ளப்பட்டு வருகின்றன. இறந்துவிட்டதாக நினைத்த நபர் சுமார் 45 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் இணைய உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்