'இப்படி ஒரு கணவன் கிடைச்சா வாழ்க்கை சொர்க்கம் தான் பாஸ்'... நெகிழ்ந்து உருகிப்போன நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாழ்க்கையில் சரியான துணை அமைந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் வசந்தம் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

'இப்படி ஒரு கணவன் கிடைச்சா வாழ்க்கை சொர்க்கம் தான் பாஸ்'... நெகிழ்ந்து உருகிப்போன நெட்டிசன்கள்!

வட இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை என்பது பூதாகரமாக உள்ளது. அங்குப் பெண்கள், தங்கள் குடும்பத்தினரின் தண்ணீர் தேவைக்காகக் கிணறுகளிலிருந்தும், தொலைதூர அடிகுழாய் கிணறுகளிலிருந்தும் சிரமத்துடன் தண்ணீர் சேகரித்து வரும் நிலையே இன்னும் நீடித்து வருகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள பான்புர் பவா சிற்றூரைச் சேர்ந்தவர் பரத்சிங். 

இவரது மனைவி வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து அடிகுழாய் பம்ப் மூலம் சிரமப்பட்டு தண்ணீர் சேகரித்து வருவார். அவர்களின் வீட்டில் 4 பேர் இருக்கும் நிலையில், பரத்சிங்யின் மனைவி குடும்பத்திற்காகத் தினசரி கஷ்டப்பட்டு தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் ஒருநாள் அந்த அடிகுழாய் கிணறு பழுதாகிவிடத் தண்ணீரின்றி மொத்த குடும்பமும் அவதியுற்றது.

Madhya Pradesh Man Digs Well At Home In 15 Days

இதுகுறித்து பரத்சிங்யிடம் அவரது மனைவி தெரிவிக்க, கூலித் தொழிலாளியான அவர், மனைவி படும் கஷ்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என முடிவு செய்தார். ஆனால் கூலி வேலைக்குச் சென்றால் தான் பணம் ஈட்ட முடியும் என்ற நிலையில் உள்ள தன்னால் என்ன செய்ய முடியும் என யோசித்த அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது வீட்டில் உள்ள காலியிடத்தில் சொந்தமாகக் கிணறு தோண்டத் தீர்மானித்தார். ஆனால் அதற்கும் அதிகப் பணம் தேவைப்பட்டது.

இதையடுத்து தானாகவே தினமும் உடலுழைப்பு செய்து கிணறு தோண்ட முடிவு செய்த பரத்சிங், தினமும் கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டார். தொடர்ந்து 15 நாள் கடின உழைப்பில் கிணறு தோண்டி முடித்தார் பரத்சிங். அதில் தண்ணீரும் ஊற்றெடுத்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். மனைவியின் துயரைப் போக்கக் கணவன் செய்த முயற்சி பலரையும் கவர்ந்துள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலானதையடுத்து நெட்டிசன்கள் பலரும் பரத்சிங்யை பாராட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்