மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்துள்ள நிலையில் டிவிட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது #TNRejectsBJP.
தமிழகத்தில் பாஜக சார்பாக தமிழிசை (தூத்துக்குடி), ஹெச்.ராஜா (சிவகங்கை), சி.பி.ராதாகிருஷ்ணன் (கோவை), பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்) என அனைத்து தொகுதிகளிலும் நட்சத்திர வேட்பாளர்களே போட்டியிட்டனர். இவர்களில் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்தவர். கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் என மற்றவர்களும் வெற்றி பெறுவார்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே சி.பி.ராதாகிருஷ்ணன் தவிர யாருமே முன்னிலையில் இல்லை.
அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அனைவரும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்திய அளவில் பாஜக இமாலய வெற்றி பெற்ற நிலையிலும் அதைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர் தமிழக பாஜக தலைவர்கள். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் டிவிட்டரில் #TNRejectsBJP தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.