'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு' லஞ்ச்க்கு ‘நோ’ சொல்லும் லாலு? இதுதான் காரணமா?
முகப்பு > செய்திகள் > இந்தியா17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிட்ட பிறகான இந்த நாட்களில் மதிய உணவு எடுத்துக்கொள்வதை லாலு பிரசாத் யாதவ் தவிர்த்து வருவதாக அவரது மருத்துவர்கள் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்தி தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
542 தொகுதிகளில் நடத்தப்பட்ட மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, வரும் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக பாஜக-வின் மோடி மீண்டும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கிறார்.
இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாததால், லாலு பிரசாத் யாதவினை இந்தத் தேர்தல் முடிவுகள் மனதளவில் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மாட்டுத் தீவன ஊழலில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக லாலு பிரசாத் யாதவ் 14 வருட சிறைத் தண்டனை காலத்தை தற்போது அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவரை பரிசோதிக்கும் ராஜேந்திர இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை மருத்துவர் உமேஷ் பிரசாத் இதுகுறித்து கூறுகையில், கடந்த 2,3 நாட்களாகவே லாலு பிரசாத் எப்போதும் இல்லாத அளவுக்கு மதிய உணவை அறவே தவிர்த்து வருவதாகவும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஏற்கனவே இன்சுலின் செலுத்துவதில் சிக்கல் உள்ளதால், இவ்வாறு அவர் மதிய உணவைத் தவிர்த்தால் மதிய உணவு அளிப்பதில் மேலும் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.