'மகளின் திருமணநிகழ்ச்சியில் உற்சாகமாக பாடிய எஸ்.ஐ.'... 'மேடையிலேயே மயங்கி விழுந்து பலியான சோகம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகளின் திருமண விழா இசைக் கச்சேரியில் பாட்டு பாடிய உதவி ஆய்வாளர், திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'மகளின் திருமணநிகழ்ச்சியில் உற்சாகமாக பாடிய எஸ்.ஐ.'... 'மேடையிலேயே மயங்கி விழுந்து பலியான சோகம்'!

கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் 55 வயதான விஷ்ணுபிரசாத். இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய 3 பிள்ளைகளில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், இளைய மகளான ஆர்ச்சாவுக்கு, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறத் தொடங்கின. திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்தது. கடைசி மகளின் திருமணம் என்பதால் விஷ்ணு பிரசாத் செலவைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வந்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இசைக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

இசைக் கச்சேரியில் பாடகர்கள் பாடிக்கொண்டிருந்தபோது, விஷ்ணு பிரசாத்தின் நண்பர்கள் சிலர் அவரையும் பாடல் பாடும்படி கூறினார்கள். விஷ்ணுபிரசாத் நன்றாக பாடக்கூடியவர் என்பதால், அவரும் அதை ஏற்று 'அமரம்' படத்தில் மகளுக்காக, தந்தை மம்முட்டி பாடிய பாடலான 'ராக்கிளி பொன்மகளே' என்ற பாடலை மைக் பிடித்து உற்சாகமாக பாடத் தொடங்கினார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மேடையில் மயங்கி சரிந்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தந்தை மயங்கி விழுந்தபோது, அங்கு மகள் ஆர்ச்சா இல்லை. இதையடுத்து, விஷ்ணுபிரசாத்தை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மறுநாள் திருமணம் என்ற நிலையில் விஷ்ணுபிரசாத் இறந்த தகவலை அவரது மகளிடம் தெரிவித்தால், அவரால் அந்த துக்கத்தை தாங்க முடியாது என உறவினர்கள் நினைத்தனர்.  மேலும் விஷ்ணுபிரசாத் ஆசை, ஆசையாக தனது மகளுக்கு நடத்த திட்டமிட்ட திருமணம் தடைபடும் என்பதால், அந்த தகவலை ஆர்ச்சாவிடம் தெரிவிக்காமல் மறைப்பது என்று உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டப்படி ஆர்ச்சாவுக்கு திருமண நடைபெற இருந்தபோது, தந்தை எங்கே என்று ஆர்ச்சா கேட்டுள்ளார். அதற்கு தந்தை வெளியே சென்றிருக்கிறார், திருமணத்திற்கு வந்துவிடுவார் என்று கூறி உறவினர்கள் சமாதானம் செய்தனர். அதன்பிறகு தனது கழுத்தில் தாலி ஏறும் வரை தந்தை திருமண மண்டபத்திற்கு வரவில்லை என்பதால், அவரை மகள் கலங்கிய கண்களுடன் தேடிக் கொண்டே இருந்தார்.

மணமகனும், உறவினர்களும் அவரது தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி திருமணத்தை நடத்தி முடித்து மணமகன் வீட்டுக்கும் அனுப்பிவைத்தனர். திங்கள்கிழமை காலை விஷ்ணுபிரசாத்தின் இறுதி சடங்கிற்காக, மகள் ஆர்ச்சாவிடம் அவரது தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.  தனக்கு நல்ல கணவரை தேர்ந்தெடுத்து கொடுத்த தந்தை, திருமணத்தை காணும் முன்பே மரணமடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஆர்ச்சா கதறி அழுதது அங்கு கூடியிருந்த அனைவரையும் உருக்குவதாக இருந்தது.

ATTACK, CARDIACARREST, KERALACOP