ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்ட சிறுவன். போலீசார் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு...நன்றி சொன்ன மருத்துவர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தை சேர்ந்த 12 வயது சிறுவனை ஒரு நாள் காவல்துறை கூடுதல் இயக்குனராக்கி இருக்கிறது அம்மாநில காவல்துறை.
அதிர்ச்சி
உத்திர பிரதேச மாநிலம், ப்ரக்யராஜ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் தூபே. எலெக்ட்ரிக் ஆட்டோ ஓட்டும் சஞ்சய்க்கு ஹர்ஷ் தூபே என்னும் மகன் இருக்கிறான். தற்போது 12 வயதான ஹர்ஷ் -க்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவர்களிடம் தனது மகனை அழைத்துச் சென்றிருக்கிறார் சஞ்சய். அப்போது, சிறுவனுக்கு கேன்சர் பாதிப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இருப்பினும், மருத்துவர்கள் தொடர்ந்து ஹர்ஷ் தூபேவிற்கு சிகிச்சை அளித்துவருகிறார்கள். தன்னம்பிக்கையும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதாலும் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனையடுத்து, ஹர்ஷ் தூபேவின் தன்னம்பிக்கையையும் வாழ்வின் மீதான நேர்மறை எண்ணங்களையும் விதைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்திருக்கிறார் சஞ்சய். இதன் பலனாக சமூக நல ஆர்வலர்களின் மூலமாக பிரக்யராஜ் பகுதி காவல்துறை கூடுதல் இயக்குனருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருநாள் போலீஸ்
இதனையடுத்து பிரக்யராஜ் பகுதியின் ஒருநாள் காவல்துறை கூடுதல் இயக்குனராக ஹர்ஷ் பணிபுரிந்திருக்கிறான். போலீஸ் அதிகாரிகளின் தொப்பியுடன் அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுவனுக்கு அதிகாரிகள் சல்யூட் அடித்ததுடன், சில கோப்புகளில் கையெழுத்தும் வாங்கியிருக்கிறார்கள். அதன்பிறகு காவல்துறையினரின் பொறுப்புகள் குறித்து, சிறுவன் ஹர்ஷ் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தான்.
இதுகுறித்து பேசிய பிரக்யராஜ் பகுதி காவல்துறை கூடுதல் இயக்குனர் பிரேம் பிரகாஷ்," கேன்சர் நோயினால் சிறுவன் ஹர்ஷ் தூபே படும் கஷ்டங்களை அறிந்து மனவேதனை அடைந்தேன். அவனுக்கு உதவ உள்ளூர் மக்கள் பலரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதை அறிந்தேன். ஆகவே, சிறுவனின் மன உறுதியை மேலும் அதிகரிக்க இந்த முடிவை எடுத்தேன்" என்றார்.
ஒருநாள் காவல்துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஹர்ஷ்-உடன் சக காவல்துறை அதிகாரிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் பிரக்யராஜ் பகுதி காவல்துறையினரின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்