குரங்கு அம்மைக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு.. விசாரணை தீவிரம்.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார். மேலும், இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை
வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது. தற்போது 80 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த நோயினால் 22,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது.
குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
முதல் உயிரிழப்பு
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய திருச்சூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர் உயிரிழந்திருக்கிறார். குரங்கு அம்மையினால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.
அவருக்கு வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சோதனையிலும் பாஸிட்டிவ் என்றே வந்திருக்கிறது. இதனையடுத்து அவர் இறந்த பிறகும் அவரது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில், அதில் வைரஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வீனா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.
விசாரணை
இதுகுறித்து பேசிய வீனா ஜார்ஜ்,"வெளிநாட்டில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் என்றே வந்திருக்கிறது. அந்த இளைஞருக்கு குரங்கு அம்மையின் அறிகுறிகள் ஏதும் இல்லை. அவர் மூளைக்காய்ச்சல் மற்றும் சோர்வு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் பரிசோதனை முடிவை சனிக்கிழமை அன்றுதான் அளித்தனர். குரங்கு காய்ச்சலால் இறப்பு விகிதம் மிகக் குறைவு என்பதால், மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்" என்றார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வீனா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்