'சுற்றுச்சூழல் தினத்தில் மரம் நடுவது வழக்கம்'... 'ஆனா போலீசாரை பதற வைத்த ஒரே ஒரு செடி'... பரபரப்பை கிளப்பிய இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக சுற்றுச்சூழல் தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக மரம் நடுவது வழக்கம்.
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வண்ணம் மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இதே ஜூன் 5-ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நட்ட செடியால் போலீசார் அந்த இளைஞர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
சுற்றுச்சூழல் தினத்தில் செடி நடுவதெல்லாம் குற்றமா எனக் கேட்டால் இல்லை, ஆனால் அந்த இளைஞர்கள் நட்டது கஞ்சா செடி. கேரள மாநிலம் குறிஞ்சாடி கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜூன் 5-ம் இளைஞர்கள் சிலர் வந்து சாலை ஓரத்தில் இரண்டு செடிகளை நட்டு அதனை தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். அப்படிப் போட்டோ எடுக்கும்போது ‘இந்த செடி இங்கேயே வளரட்டும்’ என்று வசனம் வேறு பேசி சென்றுள்ளனர்.
இதனைப்பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு கஞ்சா செடிகளும் 30 செ.மீ மற்றும் 60 செ.மீ உயரத்தில் இருந்துள்ளது. இரண்டு செடிகளையும் காவல்துறையினர் அகற்றினர்.
இதனிடையே கஞ்சா செடிகளை நடவு செய்த நபர்கள் போலீஸாரிடம் பிடிபடவில்லை. கந்தசிரா பகுதியில் முன்பு கஞ்சா வழக்கில் சிக்கிய நபர் ஒருவர் கஞ்சா செடிகளைப் பராமரிப்பதாகவும் அந்த நபருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்