‘அம்மாவ மண்ணைப் போட்டு மூடுனத பாத்தேன்’.. செப்டிக் டேங்க் அருகே தோண்டப்பட்ட குழி.. மகன் சொன்ன பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் மனைவியை கொலை செய்து செப்டிக் டேங்க் அருகே புதைத்துவிட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வெஞ்சாராமுடு பகுதியைச் சேர்ந்தவர் குட்டன். இவரது மனைவி ஷினி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போன ஷினி அவரது வீட்டு செப்டிக் டேங்க் அருகே புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள கணவர் குட்டனை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், குட்டன்-ஷினி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஷினி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவர் வேலைக்கு செல்வது பிடிக்காமல் ஷினியின் தலைமுடியை அவரது கணவர் வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது. அப்போது ஷினியை அவரது கணவர் தாக்கியுள்ளார். அம்மா அடிவாங்குவதைப் பார்த்த அவரது மூத்த மகன் தடுக்கச் சென்றுள்ளார். ஆனால் குச்சியை காட்டி மிரட்டி மகனை வெளியே சொல்லுமாறு மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் வெளியே சென்ற சிறுவன், மாலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டில் ஷினி இல்லாததால் அம்மா எங்கே என குட்டனிடம் கேட்டுள்ளார். அதற்கு உறவினர் வீட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த செவ்வாய்கிழமை வரை ஷினி வீடு திரும்பவில்லை. திடீரென குட்டனும் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் அருகில் வசிக்கும் தாய் மாமாவிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இளைய மகனிடம் விசாரிக்கையில், செப்டிங் டேங்க் அருகே அம்மாவை மண்ணைப் போட்டு அப்பா மூடியதாக தெரிவித்தார். இதனை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது குழி வெட்டப்பட்டு மூடியதற்கான தடயங்கள் இருந்தன. உடனே அங்கே தோண்டப்பட்டு ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள குட்டனை தீவிரமாக தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.