கல்யாணமானதுல இருந்தே கணவரின் கொடுமை.. நாட்டையே உலுக்கிய விஸ்மயாவின் முடிவு.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்மயா. ஆயுர்வேத மருத்துவ மாணவியான இவருக்கும், அரசு ஊழியரான கிரண் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு, மே மாதத்தில் திருமணம் நடைபெற்றது.
Also Read | "இதுக்கு மேலயும் அவ தாங்கிக்க மாட்டா.." யாசகம் செய்து சேர்த்த பணத்தில்.. கணவர் கொடுத்த அன்பு பரிசு..
இந்த திருமணத்தின் போது, கிரணுக்கு வரதட்சணையாக 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், சொகுசு கார் மற்றும் சில லட்ச ரூபாய் ரொக்கமாகவும் விஸ்மயாவின் பெற்றோர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விஸ்மயா - கிரண் திருமணம் முடிந்த கொஞ்ச நாளில் இருந்தே இருவருக்கும் இடையே பிரச்சனை உருவாகி உள்ளது.
அதாவது, தனக்கு கிடைத்த வரதட்சணை போதாது என்றும், தனக்கு கொடுக்கப்பட்ட காருக்கு பதிலாக வேறொரு மாடல் கார் தான் வேண்டும் என்றும் கூறி, மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார் கிரண். இதற்கு மேல் விஸ்மயாவின் தந்தையால் அதிக வரதட்சணை கொடுக்க முடியாத சூழல் இருக்க, மனைவியை துன்புறுத்த தொடங்கி உள்ளார் கிரண்.
விஸ்மயா எடுத்த முடிவு..
திருமணமான ஒரு வருடத்திற்குள் ஏராளமான துன்புறுத்தல்களை கணவர் கிரண் மூலம் விஸ்மயா அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, அனைத்து விஷயங்களிலும் தன்னுடைய கணவர் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகவும் பெற்றோர்களிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார் விஸ்மயா. இதனிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டார். விஸ்மயாவின் இந்த முடிவு, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி இருந்தது.
ஆதாரமாக இருந்த செல்போன் உரையாடல்கள்
இது தொடர்பாக, கிரண் மீது விஸ்மயாவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து, புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டார் கிரண். கடந்த ஒரு வருடமாகி நீதிமன்ற காவலில் இருந்த கிரண் குமாருக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் போது 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் செல்போன் உரையாடல்கள் உள்ளிட்டவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு குறித்து, போலீசாரும் 507 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
இதனைத் தொடர்ந்து, அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த பின்னர், நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் கிரண்குமார் தான் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதே போல, கிரண்குமாருக்கான தண்டனை விவரங்களும் இன்று அறிவிக்கப்பட்டது. கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, கொல்லம் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித் தீர்ப்பளித்துள்ளார். மேலும், அவருக்கு 12.50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தில் இருந்து, 2 லட்சம் ரூபாயை விஸ்மயாவின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை, விஸ்மயாவின் பெற்றோர்கர்கள் வரவேற்றுள்ளனர். தங்களின் மகளின் மரணம் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த தீர்ப்பு சமுதாயத்திற்கான பாடமாக இருக்க வேண்டும் என விஸ்மயாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்