"வீட்ட ஜப்தி பண்றோம்".. நோட்டீஸ் பாத்து கலங்கிய நபர்... அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு தேடி வந்த 70 லட்சம்!! அதிசயம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, அதிர்ஷ்டம் என்பது ஒருவருக்கு எந்த நேரத்தில் வந்து சேரும் என்பதையே கணிக்க முடியாது.
நம் வாழ்வில் நிறைய துயரங்கள் இருக்கும் சமயத்தில், திடீரென கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத அளவில் வாழ்க்கையில் ஏதாவது ஒரு திருப்புமுனை சம்பவங்கள் நிகழ்வதை கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் மைநகாப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் பூங்குஞ்சு (Pookkunju). இவர் மீன் விற்பனை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தனது வீட்டை கட்டுவதற்காக பூங்குஞ்சு வங்கியில் இருந்து கடன் வாங்கி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி இருக்கையில், மொத்தமாக இரண்டு லட்ச ரூபாய் மட்டுமே பூங்குஞ்சு கட்டி இருந்ததால் மீத பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், அவரது வீட்டை ஜப்தி செய்யப் போவதாகவும் வங்கியில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. இதனைக் கண்டதும் தனது குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்து எண்ணி வேதனையிலும் ஆழ்ந்துள்ளார் பூங்குஞ்சு.
அப்படி ஒரு சூழ்நிலையில், ஜப்தி நோட்டீஸ் வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் பூங்குஞ்சுவின் வாழ்க்கையையே திருப்பி போடும் அளவுக்கு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் கொண்ட பூங்குஞ்சு, வீட்டிற்கு வருவதற்கு முன்பாக லாட்டரி டிக்கெட் வாங்கி வந்துள்ளார்.
அப்போது தான், தனது வீட்டை ஜப்தி செய்ய போவதாக நோட்டீஸ் ஒன்றும் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நோட்டீஸ் வந்தது பற்றி வருத்தத்தில் இருந்த பூங்குஞ்சுவிற்கு ஒரு மணி நேரம் கழித்து அவரது சகோதரரின் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், பூங்குஞ்சு வாங்கிய லாட்டரிக்கு 70 லட்சம் ரூபாய் பரிசு விழுந்ததாக சகோதரர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்ததும் உச்சகட்ட ஆனந்தத்தில் மூழ்கி போனார் பூங்குஞ்சு.
ஜப்தி நோட்டீஸ் வந்ததால் வேதனையில் இருந்த நபருக்கு ஒரு மணி நேரம் கழித்து லாட்டரியில் 70 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ள விஷயம், அவரது வாழ்க்கையையே தலைகீழாக திருப்பி போட்டுள்ளது. 9 லட்ச ரூபாய் கடன் இருந்த நிலையில், அதன் பல மடங்காக அந்த நபருக்கு பரிசு கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | 20 வருசமா கல்லூரியில் பியூன் வேலை.. "இப்ப அதே கல்லூரி'ல".. கடின உழைப்பால் நிஜமான கனவு!!
மற்ற செய்திகள்