'உன்ன கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன்னு சொன்னேன்ல'... 'நிறைமாத கர்ப்பிணிக்காகக் கணவன் எடுத்த ரிஸ்க்'... எதிர்பாராமல் நடந்த திருப்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் ஆன பெண்களிடம் அவரது கணவன்மார்கள், உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கொள்வேன் எனக் கூறுவார்கள். அதைப் பலரும் செயலிலும் காட்டுவார்கள். அது போன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.
கேரளாவைச் சேர்ந்தவர் ஜூபில் ராஜன். இவருடைய மனைவி கர்ப்பமான நிலையில், குஜராத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவிய நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுப்போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து என அனைத்தும் நிறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜூபிலின் மனைவிக்குக் குஜராத்தில் உள்ள தாய் வீட்டிலேயே பிரசவம் பார்த்து விடலாம் என முடிவு செய்யப்பட்டது.
அந்த நேரத்தில் தான் குஜராத்தில் கொரோனா கடுமையாகப் பரவ ஆரம்பித்தது. இதனால் தாய்க்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் எதுவும் ஆகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஜூபில் ராஜன், மனைவியை எப்படியாவது கேரளாவுக்கு அழைத்து வந்துவிடலாம் என என எண்ணியுள்ளார். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காரணம் கர்ப்பிணியை 4000 கிமீ அழைத்து வருவது என்பது மிகவும் ஆபத்தான காரியம் ஆகும். காரில் அழைத்து வருவது பாதுகாப்பானது இல்லை.
அப்போது தான் ஜூபில் ராஜனுக்கு ஒரு யோசனை தோன்றியது. மனைவியை சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் கேரவன் மூலம் அழைத்து வரலாம் என எண்ணியுள்ளார். இதையடுத்து பல இடங்களில் போராடி ஒரு வழியாகப் படுக்கை, கழிப்பறை, சமையல் செய்ய இடம் எனச் சகல வசதிகளுடன் கேரவன் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். பின்னர் தனது நண்பருடன் கேரளாவிலிருந்து கேரவனில் புறப்பட்ட ஜூபில் பல இடங்களில் போலீசார் சோதனையைத் தாண்டி குஜராத் சென்றுள்ளார். மீண்டும் குஜராத்திலிருந்து தன் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருடன் கேரளாவுக்குப் பத்திரமாக வந்துள்ளனர்.
ஆனால் இந்த பயணம் என்பது மிகவும் எளிதான ஒன்றாக அமையவில்லை. கேரளாவுக்குத் திரும்பி வரும் வழியில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நடந்தது. புனே-மும்பை நெடுஞ்சாலையில் எதிர்பாராத விபத்தில் கேரவன் சிக்கியது. இதனால் அந்த பகுதி மக்களோடு பிரச்சனை ஏற்பட்டது. மொழி புரியாத இடத்தில், உதவிக்கு யாரும் இல்லாத இடத்திலிருந்த ஜூபில் ராஜனிடம் பணம் பறிக்க அங்கிருந்தவர்கள் குறியாக இருந்துள்ளார்கள். அப்போது நாங்கள் ஏழை ஓட்டுநர்கள் என்றும் சாப்பிடக்கூடப் பணம் இல்லை என்றும் நடித்து ஜூபில் ராஜன் தப்பியுள்ளார்.
அந்த கடினமான சூழலிலும் அங்குள்ள சில இளைஞர்கள் உணவு, தண்ணீர் பாட்டில் எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட, ஜூபில் ராஜன், ''மக்களின் மனதில் உதவும் மனப்பான்மையும் இரக்கமும் அப்படியே இருக்கிறது. எனது குழந்தை வளர்ந்த பின்னர் இந்தியாவின் பல நல்ல மனிதர்கள் உனக்கு உதவினார்கள் எனக் கூறுவேன்'' என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் கணவனின் அன்பால் பேசச் சொற்கள் அற்று, பிறக்கப் போகும் குழந்தைக்காகக் காத்திருக்கிறார் ஜூபில் ராஜனின் மனைவி.
மற்ற செய்திகள்