பெண் பயணியின் ‘உயிரை’ காப்பாற்றிய நிஜ ‘ஹீரோக்கள்!’... மாநிலத்தையே ‘சோகத்தில்’ ஆழ்த்தியுள்ள ‘திருப்பூர்’ விபத்து...
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பூர் விபத்தில் உயிரிழந்துள்ள கண்டக்டரும் டிரைவரும் 2018ஆம் ஆண்டு பெண் பயணி ஒருவருக்கு உதவி அவருடைய உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
திருப்பூரில் நேற்று இரவு கேரள அரசின் சொகுசுப் பேருந்து மீது எதிர் திசையிலிருந்து வந்த கன்டெய்னர் லாரி டயர் மோதி நடந்த கோர விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பேருந்தை இயக்கிய டிரைவர் கிரிஷ், கண்டக்டர் பாஜு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் கிரிஷ், பாஜு இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பயணி ஒருவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளைப் பற்றி கேரள போக்குவரத்துத்துறையினர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருவுக்கு கிரிஷ், பாஜு இருவரும் பேருந்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது பேருந்தில் இருந்த கவிதா என்ற பெண் பயணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் தவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக சகபயணிகளின் ஒத்துழைப்போடு டிரைவர் கிரிஷ் மருத்துவமனை நோக்கிப் பேருந்தை ஓட்டியுள்ளார். அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண்ணை சிகிச்சைக்கு அனுமதித்ததோடு, சிகிச்சைக்கு வேண்டிய முன் பணத்தையும் தங்களிடமிருந்த டிக்கெட் பணத்திலிருந்து அவர்கள் கட்டியுள்ளனர். மேலும் இதுகுறித்து தங்கள் உயரதிகாரிகளுக்கும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
அதன்பிறகு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வரும் வரை, கண்டக்டர் பாஜு அவருக்கு உதவியாக மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார். டிரைவர் கிரிஷ் மட்டும் சக பயணிகளுடன் பேருந்தை பெங்களூரு நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வந்த பிறகே பாஜு மருத்துவமனையிலிருந்து கிளம்பியுள்ளார். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணும் உயிர் பிழைத்துக்கொண்டுள்ளார். தங்கள் பேருந்தில் பயணித்த பெண்ணின் உயிரைக் காக்க உதவிய அவர்கள் இருவரையும் புகழ்ந்து அப்போதையை கேரளப் போக்குவரத்துத் துறை நிர்வாக இயக்குநர் பாராட்டுக் கடிதம் வழங்கியுள்ளார். பயணிகள் மீது மிகுந்த அக்கறை செலுத்தும் கிரிஷ், பாஜு இருவரும் திருப்பூர் விபத்தில் உயிரிழந்துள்ளது கேரளா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.