‘முதலாளின் கடைசி ஆசை’!.. ‘60 வயதை கடந்தும் காதல்’!.. முதல் முறையாக முதியோர் இல்லத்தில் நடக்கும் காதல் திருமணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் 60 வயதை கடந்த காதல் ஜோடிக்கு முதியோர் இல்லத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

‘முதலாளின் கடைசி ஆசை’!.. ‘60 வயதை கடந்தும் காதல்’!.. முதல் முறையாக முதியோர் இல்லத்தில் நடக்கும் காதல் திருமணம்..!

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே தைக்கட்டுசேரியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (65). இவரது கணவர் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது உதவியாளரான கோச்சானியன் (66) என்பவரை அழைத்து, ஆதரவு இல்லாத லட்சுமி அம்மாளை கடைசி வரை பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். தனது முதலாளின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு லட்சுமி அம்மாளை அன்பாக கவனித்து வந்துள்ளார்.

சில ஆண்டுகளில் இந்த அன்பு காதலாக மாறியுள்ளது. இதனை இருவரும் தங்களது மனதில் மறைத்தே காதலை வளர்த்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. பல ஆண்டுகள் கடந்தபின் லட்சுமி அம்மாள் சரியாக கவனிக்கப்பட வேண்டும் என ராமவர்மாபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே தனது வேலை காரணமாக கோச்சானியன் கோழிகோடு சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி தெருவில் விழுந்துள்ளார். அவரை மீட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வயநாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளது. பின்னர் கோச்சானியனிடம் விவரத்தை கேட்டறிந்து லட்சுமி அம்மாள் இருந்த முதியோர் இல்லத்துக்கு மாற்றியுள்ளனர்.

அங்கு இருவரும் ஒருவரை ஒருவர் அன்பாக கவனித்து வந்துள்ளனர். இவர்களது காதல் கதையை அறிந்த முதியோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளார். இதற்காக தனது மேலாதிகாரியிடம் பேசி அனுமதி பெற்றுள்ளார். ஆனால் சட்டப்படி இந்த திருமணங்களுக்கு அனுமதி கிடையாது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநில அனைத்து முதியோர் இல்லங்களின் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி இந்த திருமணத்திற்கு அனுமதி பெற்றுள்ளார்.

இதனால் வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி இருவருக்கும் முதியோர் இல்லத்தில் திருமணம் நடைபெற உள்ளது. ஒரு அரசாங்க முதியோர் இல்லத்தில் முதல் முறையாக இதுபோன்ற திருமணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

KERALA, MARRIED, LOVE