"ஸ்கூல் லீவு விட்டாச்சுன்னு.. இதையெல்லாம் பண்ண கூடாது.. அன்புடன் உங்களது கலெக்டர்".. குழந்தைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி எழுதிய பாச கடிதம்.. வைரல் பதிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கனமழையை முன்னிட்டு கலெக்டர் ஒருவர் எழுதிய பாச கடிதம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கனமழை
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து இந்திய வானிலை ஆய்வுமையம் கேரளாவுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து, கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலப்புழா மாவட்டத்தில் கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவித்திருக்கிறார் அந்த மாவட்டத்தின் கலெக்டர் V. R. கிருஷ்ண தேஜா. விடுமுறையில் மாணவர்களுக்கு அவர் வழங்கியிருக்கும் அறிவுரைகள் தான் தற்போது பலராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
விடுமுறை
கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தில் கலெக்டராக இருந்த ஸ்ரீராம் வெங்கடராமன் பணிமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றுள்ளார் V. R. கிருஷ்ண தேஜா. இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு அவர் விடுமுறை அறிவித்திருந்தார். மேலும், குழந்தைகளுக்கும் சில அறிவுரைகளை அவர் வழங்கியிருக்கிறார். இதுகுறித்த அவரது பேஸ்புக் பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த பதிவில்,"அன்புள்ள குழந்தைகளே, நான் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனது முதல் ஆர்டர் உங்களுக்காக, உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நினைக்கிறேன். நாளை உங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளேன். இருப்பினும், தயவுசெய்து நீர்நிலைகளில் விளையாடவோ அல்லது மீன்பிடிக்கச் செல்லவோ வேண்டாம். நமது மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். பெற்றோர் வேலைக்குச் சென்றிருப்பார்கள். அவர்கள் இல்லை என்று நினைத்து வெளியே செல்ல வேண்டாம். தொற்று நோய்கள் பரவும் காலம் இது. மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள். விடுமுறை என்று நினைத்து சும்மா இருக்காதீர்கள். உங்கள் பாடங்களை படியுங்கள். நன்றாகப் படித்து புத்திசாலியாக மாறுங்கள். அன்புடன் கலெக்டர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கலெக்டர் அங்கிள்
இந்த கடிதம் வைரலாக பரவவே, நேற்றும் புதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார் அவர். அதில்,"அன்புள்ள குழந்தைகளே, நாளையும் விடுமுறை அறிவித்துள்ளேன் என்பதை கூறிக் கொள்கிறேன். நேற்று சொன்னதை மறக்காதீர்கள்..மழைக்காலம் என்பதால், பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் போது, பைகளில் குடை, ரெயின்கோட் உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர்களை வழி அனுப்பும் போது கட்டி அணைத்து முத்தம் கொடுத்து வழி அனுப்புங்கள் ... நாங்கள் இங்கேயே உங்களுக்காக காத்திருப்போம் கவனமாக வாகனம் ஓட்டி சென்று மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பி வாருங்கள் என்று அன்புடன் வழி அனுப்புங்கள்...நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். புத்திசாலியாக இருங்கள்...மிகுந்த அன்புடன் உங்கள் பிரியமான கலெக்டர் அங்கிள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த பதிவுகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்