ஊழியருக்கு ஒரு கோடி மதிப்புள்ள பென்ஸ் கார் பரிசு.. இன்னும் நிறைய பேருக்கு கொடுக்க போறோம்.. கேரள தொழிலதிபரின் அசத்தல் அறிவிப்பு
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா: கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரி:
கேரளாவை சேர்ந்த ஏ.கே.ஷாஜி, என்பவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இந்த நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டுகள் பணியாற்றியவர் தான் சிஆர் அனிஷ். வடக்கு கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது, மைஜியில் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக உள்ளார்.
நீங்கள் எனக்கு ஒரு வலுவான தூண்:
இந்நிலையில் ஏ.கே.ஷாஜி, அனிஷின் இத்தனை ஆண்டுகால விசுவாசத்திற்காக பரிசாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கிளாஸ் 220 டி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து ஷாஜி தன் டிவிட்டர் பக்கத்தில், 'அன்புள்ள அனி கடந்த 22 வருடங்களாக நீங்கள் எனக்கு ஒரு வலுவான தூணாக இருக்கிறீர்கள். இப்போது உங்கள் புதிய பயணக் கூட்டாளியை நீங்கள் நேசிப்பீர்கள் என்று நம்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.
அதிக கார்களை எங்களால் வழங்க முடியும்:
அதோடு, மைஜி (MyG) ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான நிகழ்வு ஒன்றையும் ஷாஜி ஏற்பாடு செய்துள்ளார். அதில், 'நம் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் ஊழியர்கள் இல்லை. நிறைய பேர் பங்குதாரர்கள். இது ஒரு பெருமையான தருணம். அனி கடந்த 22 வருடங்களாக என்னுடன் இருக்கிறார். இந்த ஆண்டு எங்கள் பார்ட்னர்களுக்கு மேலும் அதிக கார்களை வழங்க முடியும் என்று நம்புகிறோம்' எனக் கூறியுள்ளார்.
ஆறு ஊழியர்களுக்கு தலா ஒரு கார் பரிசு:
ஷாஜி மைஜி என்ற நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே அனிஷும் ஷாஜியும் நண்பர்கள். அனிஷ் இந்த நிறுவனம் தொடங்கியது முதல் சந்தைப்படுத்தல், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு அலகுகள் உட்பட நிறுவனத்தின் பல பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார். ஷாஜி முன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது ஆறு ஊழியர்களுக்கு தலா ஒரு காரை பரிசாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்