'விரக்தியில் லாட்டரி சீட்டை கிழித்து எறிந்த ஆட்டோ டிரைவர்'... 'ஆனா இப்படி ஒரு ட்விஸ்ட் நடக்கும்ன்னு யாரும் நினைக்கல'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவசர கதியில் செய்த வேலையால் தற்போது ஜாக்பாட் அடித்தும் அதை அனுபவிக்க முடியாமல் பரிதவிப்பில் நிற்கிறார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டம் செங்களா பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி. இவர் அருகிலுள்ள நெல்லிக்கட்டை டவுன் பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் அதிகமாக உண்டு. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கேரள அரசின் வின் வின் என்ற லாட்டரியில் 3 சீட்டுகளை வாங்கினார். லாட்டரி சீட்டுகளை வாங்கிய பின்னர் தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிய அவர், தான் லாட்டரி சீட்டுகளை வாங்கியதையே மறந்து விட்டார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இந்த சீட்டுக்கான குலுக்கல் நடந்தது.
இதன் முதல் பரிசு ரூ.60 லட்சம் ஆகும். இந்த சூழ்நிலையில் தான் லாட்டரி சீட்டுகளை வாங்கி வைத்திருப்பது குறித்து திடீரென அவருக்கு ஞாபகம் வர ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து ஒரு செய்தித்தாளை வாங்கி தனக்குப் பரிசு விழுந்துள்ளதா என பார்த்தார். மேலோட்டமாக பார்த்தபோது பரிசு எதுவும் விழவில்லை எனக் கருதினார். இதனால் விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற அவர், உடனே தான் வைத்திருந்த லாட்டரி சீட்டினை கிழித்து எறிந்துள்ளார். அங்கு தான் பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது. மன்சூர் அலி கிழித்து எறிந்த ஒரு சீட்டுக்கு 2வது பரிசான ரூ.5 லட்சம் கிடைத்திருந்தது.
இதற்கிடையே மன்சூர் அலிக்கு 2வது பரிசு 5 லட்சம் கிடைத்ததை லாட்டரி முகவர் ராமகிருஷ்ணன் கண்டுபிடித்தார். மன்சூர் அலியை சந்தித்து 5 லட்சம் பரிசு கிடைத்த விவரத்தைக் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன அவர், உடனே சீட்டினை கிழித்துப் போட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது சில துண்டுகள் அங்கேயே கிடந்தன. அதைப் பொறுக்கி எடுத்து ஒட்ட வைத்தார். பின் காசர்கோடு மாவட்ட லாட்டரி துறை அதிகாரியைச் சந்தித்து விவரத்தைக் கூறினார். ஆனால் கிழித்துப் போட்ட லாட்டரி சீட்டுக்குப் பரிசு கிடைக்க வாய்ப்பு குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
அதே நேரத்தில் அந்த லாட்டரி சீட்டில் உள்ள க்யூ ஆர் கோடு கிடைத்தால் அதை வைத்தும் பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் இதுகுறித்து மேலிடத்தில் பேசி முடிவு சொல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லையே என்ற நிலைக்கு மன்சூர் அலி தற்போது தள்ளப்பட்டுள்ளார். இதைச் சாதாரணமான ஒரு நிகழ்வாகக் கடந்து செல்லாமல், வாழ்க்கையில் பொறுமை என்பது எவ்வளவு முக்கியம், என்பதற்கு பெரும் உதாரணமாக மாறியுள்ளது மன்சூர் அலிக்கு நடந்துள்ள சம்பவம்.
மற்ற செய்திகள்