இந்தியாவுலயே முதல்முறை.. 82 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை இன்றி பேஸ்மேக்கர், இதய வால்வு மாற்றம்.. காவேரி மருத்துவனை சாதனை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

82 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், இரண்டு இதய வால்வுகளை மாற்றியதுடன் பேஸ்மேக்கரையும் பொருத்தி சாதனை படைத்திருக்கிறது சென்னையில் இயங்கிவரும் காவேரி மருத்துவமனை.

இந்தியாவுலயே முதல்முறை.. 82 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை இன்றி பேஸ்மேக்கர், இதய வால்வு மாற்றம்.. காவேரி மருத்துவனை சாதனை..!

பாதிப்பு

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் 82 வயதான திரு பாலகிருஷ்ணன். இவருடைய இதய வால்வுகள் பல  கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. கடுமையான பெருநாடி வால்வு கசிவு, மிட்ரல் வால்வு கசிவு மற்றும் கடுமையான நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை காரணமாக இவருக்கு "கசிவு வால்வு நோய்" ஏற்பட்டிருக்கிறது.

இந்த நோயின் தாக்கத்தினால் இதய வால்வுகள் சரிவர மூடாமல் போகவே, ரத்த ஓட்டத்தில் கசிவு ஏற்பட்டதால் இது மாரடைப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சிகிச்சை

சென்னை காவேரி மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர்.ஆர்.அனந்தராமன் இதுகுறித்து பேசுகையில்," அவருக்கு மிட்ரல், அயோர்டிக் வால்வு மற்றும் ட்ரைகுஸ்பிட் வால்வு ஆகிய இரண்டிலும் கடுமையான கசிவு இருந்தது. இதனையடுத்து 2012 ஆம் ஆண்டில் அவருக்கு இரு வால்வுகள் மாற்றம் செய்யப்பட்டன. அத்துடன் பேஸ்மேக்கரும் பொருத்தப்பட்டது. அவரது இதயத்தின் செயல்பாடு கணிசமாகக் குறைந்த காரணத்தினால் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்றுவந்தார்" என்றார்.

மீண்டும் சிக்கல்

இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் பாலகிருஷ்ணன் மீண்டும் சுவாசிப்பதில் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார். மேலும், 4 முதல் 6 மாதங்களில் அவரது நிலை மோசமடையவே, அவரால் நடக்கவோ, படுக்கவோ முடியாமல் போயிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் மருத்துவ குழு பாலகிருஷ்ணனை பரிசோதித்தது. அதில், அவருடைய இதயத்தில் பெருநாடி மற்றும் மிட்ரல் பயோ புரோஸ்டெடிக் வால்வுகள் மீண்டும் சுருங்குவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பேசிய டாக்டர்.ஆர்.அனந்தராமன்,"அவரது வயது, குறைந்த இதய செயல்பாடு மற்றும் முந்தைய அறுவை சிகிச்சை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதிக ஆபத்துகள் இருப்பதால், அதே அறுவை சிகிச்சையை மீண்டும் செய்ய முடியவில்லை. இதய மருத்துவ நிபுணர்களுடனான விவாதத்திற்கு பிறகு பெருநாடி மற்றும் மிட்ரல் வால்வுகள் இரண்டிற்கும் டிரான்ஸ்கேதீட்டரைப் பயன்படுத்தி வால்வை மாற்றியமைத்தோம், இது சிறந்த தீர்வாகத் தோன்றியது. மேலும், அவரது இதயத்தில் உள்ள கடத்துத்திறன் அடைப்பை ஒரு பேஸ்மேக்கர் மூலம் குணமாக்க நினைத்தோம். ஆகவே, டிரான்ஸ்கேதீட்டர் பேஸ்மேக்கரை பயன்படுத்தி அந்த சிக்கலை சரிசெய்தோம்” என்றார்.

டிரான்ஸ்கேதெட்டர்

இந்த சிகிச்சை பற்றி பேசிய டாக்டர்.ஆர்.அனந்தராமன், "பொதுவாக, திறந்த இதய அறுவை சிகிச்சையில் திசு வால்வு மாற்றத்திற்கு டிரான்ஸ்கேதெட்டர் செயல்முறை பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக அந்நடைமுறை பல தோல்விகளை சந்தித்துவருகிறது. ஆனால், இந்த செயல்முறையால் நோயாளிகள் குணமடையும் வேகம் அதிகரித்திருக்கிறது. பாலகிருஷ்ணனை பொறுத்தவரையில் அவர், இந்த சிகிச்சை முடிந்த 3வது  நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது நலமாக இருக்கிறார்" என்றார்.

பாராட்டு

இந்த சிகிச்சையின் வெற்றி குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், "டிரான்ஸ்கேதீட்டர் மூலம் வால்வு மாற்றம் செய்யப்படுவது மேற்கு நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு இந்த செயல்முறை உகந்தது. இருப்பினும் டிரான்ஸ்கேதெட்டர் நடைமுறைகள் பல ஆபத்துகள் மற்றும் சிக்கல்களை உள்ளடக்கியது. இது ஒரு நிபுணர் குழு மற்றும் சரியான உள்கட்டமைப்பு மூலம் மட்டுமே கையாளப்படும். இதயநோய் நிபுணர் மற்றும் அவரது திறமையான குழுவினரின் கீழ் ஹைப்ரிட் கேத் லேப் ஆப்பரேட்டிங் அறையில் இந்த செயல்முறை செய்யப்பட்டது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக எங்கள் இதய மருத்துவர், டாக்டர் அனந்தராமன் மற்றும் குழுவினரைப் பாராட்ட விரும்புகிறேன்" என்றார்.

சென்னையில் இயங்கிவரும் காவேரி மருத்துவமனை, 82 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், இரண்டு இதய வால்வுகளை மாற்றியதுடன் பேஸ்மேக்கரையும் பொருத்தியுள்ளது தமிழக மருத்துவ வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

KAUVERY HOSPITAL, SURGERY, சாதனை

மற்ற செய்திகள்