'தமிழ்நாட்டை அவமதிப்பதா'!?.. விடாப்பிடியாக இருக்கும் கர்நாடக அரசு!.. அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா அவசர மீட்டிங்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசை கேட்காமல் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்ததாக, அவரை டெல்லியில் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி கர்நாடக அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாக, அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த திட்டத்திற்கான செயல் திட்டத்தை தயாரிப்பது குறித்து சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் எடியூரப்பா இவ்வாரக் கடைசியில் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்துவார் என்று பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். அதில், திட்டத்திற்கு தேவையான ஒப்புதல்களை எவ்வாறு பெறுவது மற்றும் திட்டத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும் என்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு மட்டுமே நிலுவையில் இருப்பதாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். மேகதாது திட்டம் கர்நாடகாவிற்கு முக்கியமானது என வலியுறுத்திய அவர், இது எதிர்காலத்தில் காவிரி நீர் மேலாண்மையில் முக்கிய பங்காற்றும் எனவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்துப் பேசிய பின்னர் சென்னை திரும்பிய தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சட்டத்திற்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் எதிரானது என்று கூறினார். மேலும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்பதில் எடியூரப்பா உறுதியாக இருப்பது, தனக்கு வியப்பாகவும், வருத்தமளிப்பதாகவும் உள்ளதாக துரைமுருகன் பதிலளித்தார்.
மற்ற செய்திகள்