செல்ல நாய்க்கு பிறந்தநாள்.. 100 கிலோவில் கேக்.. 4000 பேருக்கு விருந்து போட்ட தொழிலதிபர்.. மிரண்டுபோன பொதுமக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது செல்ல நாயின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பலருக்கும் நாய்கள் வளர்ப்பது மிகவும் பிடித்துப்போய் விடுகிறது. எப்போதும் நம்மையே சுற்றி சுற்றி வரும் நாய்களை தங்களது வீட்டில் உள்ள ஒரு உறுப்பினர் போலவே சிலர் கருதுவதும் உண்டு. பழங்காலத்திலேயே நாய்களை மக்கள் தங்களது வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்த்து வந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது செல்ல நாயின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிறந்தநாள்
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள முதலாகி தாலுக்காவில் அமைந்துள்ளது துக்காநதி என்னும் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சிவப்பா சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர்களது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார் சிவப்பா. கிரிஷ் என பெயரிடப்பட்ட இந்த நாய்க்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்திருக்கிறது. இதனை பிரம்மாண்டமாக கொண்டாட நினைத்திருக்கிறார் அவர்.
இதனையடுத்து, 100 கிலோவில் கேக் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார் சிவப்பா. ஹேப்பி பர்த்டே கிரிஷ் என எழுதப்பட்ட பிரம்மாண்ட கேக் டெலிவரி செய்யப்படுவதை ஊர் மக்கள் வியப்புடன் பார்த்திருக்கின்றனர். இதுமட்டும் அல்லாமல், தனது நாயின் பிறந்தநாளை முன்னிட்டு ஊர் மக்களுக்கு பிரம்மாண்ட விருந்து அளிக்கவும் முடிவு செய்த சிவப்பா, 4000 பேருக்கு விருந்து சமைத்திருக்கிறார்.
விருந்து
பந்தல், தோரணம் என திருமண வீடு போல அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. டிஜே பார்ட்டியும் இந்த விருந்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. தனது செல்ல நாய்க்கு புத்தாடை அணிவித்து, தலையில் குல்லாவுடன் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துவந்த சிவப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் கேக்கை வெட்டி கிரிஷின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இதன் பிறகு நடைபெற்ற பிரம்மாண்ட விருந்தில் 4000 பேர் கலந்துகொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து பேசிய சிவப்பா," கிரிஷ் எங்களது வீட்டில் ஒரு நபர். அனைவரின் அன்பையும் கிரிஷ் பெற்றிருக்கிறது. எங்களுடைய பிணைப்பை வெளிப்படுத்தவே இந்த விழாவினை ஏற்பாடு செய்தேன்" என்றார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்