EIA 2020 வரைவுக்கு இடைக்காலத் தடை!.. உயர் நீதிமன்றம் அதிரடி!.. எதனால இவ்வளவு சிக்கல்?
முகப்பு > செய்திகள் > இந்தியாசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை இறுதி செய்து அரசிதழில் வெளியிட மத்திய அரசிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.
பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியினை எளிதாக பெறும்படியாக சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ல் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்து அதன் வரைவு அறிவிக்கையை பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு மார்ச் 23-ம் தேதி வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிக்கைக்கு தடைகோரி டெல்லி மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த ஜூன் 30ஆம் தேதி, டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த வரைவு அறிவிக்கையின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க கால அவகாசத்தை ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நீட்டித்தும், 22 இந்திய மொழிகளில் இந்த அறிவிக்கையை மொழிபெயர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வரைவு அறிவிக்கைக்கு எதிராக United Conservation Movement என்கிற அமைப்பு தொடர்ந்த வழக்கை இன்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.
அப்போது ஏன் இன்னும் ஆங்கிலம், ஹிந்தி அல்லாத பிற மொழிகளில் அறிவிக்கையை மொழிபெயர்க்கவில்லை என்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சிவக்குமார் ஒவ்வொரு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்களையும் தங்களது மாநில மொழியில் வரைவு அறிவிக்கையை மொழிபெயர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்ட முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பதிலை ஏற்காத நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணை தேதி வரை இந்த வரைவு அறிவிக்கையை மத்திய அரசு இறுதி செய்து வெளியிடக்கூடாதென இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இதற்கு இடைப்பட்ட காலத்தில் வரைவு அறிவிக்ககையை பிற மொழிகளில் மொழிபெயர்த்து மக்களிடையே கொண்டு சென்றிருந்தால் இடைக்காலத் தடையை நீக்குவதற்கான மனுவை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்றும் கூறி வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்காக செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மற்ற செய்திகள்