'உலகையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்து'... '9 வருடத்திற்கு முன்பே எச்சரித்த நிபுணர்'... வெளியான அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா என்னும் அரக்கன் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடத்த விமான விபத்து உலகையே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.
துபாயிலிருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம், தரை இறங்கும் போது இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். துபாயிலிருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தைத் தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.
விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக ஓடிய விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனால் அதிலிருந்த பயணிகள் அலறினார்கள். பள்ளத்தில் விழுந்த விமானம் பயங்கர சத்தத்துடன் இரண்டாக உடைந்தது. விமானி அறையிலிருந்து முன்பக்க கதவு உள்ள பகுதி வரை உடைந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதற்கிடையே கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றது. குறிப்பாக ஈரமான சூழலில் இங்கு விமானங்கள் தரையிறக்கக்கூடாது” என்று விமான பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் கேப்டன் மோகன் ரங்கநாதன் 9 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்திருந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் மோகன் ரங்கநாதன் செய்த எச்சரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறியுள்ள தகவலில், ''ஏற்கனவே நடந்த மங்களூரு விபத்துக்குப் பிறகு நான் வழங்கிய எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. இது ஒரு டேபிள்டாப் ஓடுபாதையாகும். ஓடுபாதையின் முடிவில் உள்ள இடையக மண்டலம் போதுமானதாக இல்லை. விமான நிலையம் ஓடுபாதையின் முடிவில் 240 மீட்டர் இருக்கவேண்டும். ஆனால், அது 90 மீட்டர் மட்டுமே இருக்கிறது. மேலும், ஓடுபாதையின் இருபுறமும் இடைவெளி கட்டாயமாக 100 மீட்டர் இருக்கவேண்டும். ஆனால், 75 மீட்டர் மட்டுமே உள்ளது'' என்று ரங்கநாதன் கூறியுள்ளார்.
இதனிடையே கேப்டன் மோகன் ரங்கநாதன் கடந்த 2011 ஆம் ஆண்டு, அவர் விமான பாதுகாப்பு ஆலோசனைக் குழு தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ''ஓடுபாதை இறுதி பாதுகாப்பு பகுதி மற்றும் ஓடுபாதையின் முடிவிற்கு அப்பால் உள்ள இடம் நிலப்பரப்பாக இல்லை. செயல்பாடுகள் பாதுகாப்பாக இருக்க ஓடுபாதையின் நீளத்தைக் குறைக்க வேண்டும்'' என எழுதியுள்ளார். அதனுடன் பல்வேறு எச்சரிக்கைகளையும் மேற்கோள்காட்டி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 9 ஆண்டுகளுக்கு முன்பே கேப்டன் மோகன் ரங்கநாதன் எச்சரிக்கை செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்