'உங்க சபலத்துக்காக குடும்பத்தையே சிதைச்சிட்டீங்க'... 'டாக்டர் மனைவி கொலை'... அதிரவைக்கும் திருப்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டாக்டர் மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, தனது முன்னாள் காதலிக்காகக், கணவனே மனைவியை கொலை செய்த நிலையில், தற்போது அவரும், அவரது முன்னாள் காதலியும் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'உங்க சபலத்துக்காக குடும்பத்தையே சிதைச்சிட்டீங்க'... 'டாக்டர் மனைவி கொலை'... அதிரவைக்கும் திருப்பம்!

கர்நாடக சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் லட்சுமேஸ்வரா பகுதியில் வசித்து வந்தவர் ரேவந்த். பல் டாக்டரான இவர் பீரூரில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே  கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் கவிதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

மேலும் வீட்டிலிருந்த நகைகளும் காணாமல் போயிருந்தன. இதனால் நகைக்காக கவிதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதினார்கள். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கையாகக் காத்திருந்தனர். இந்நிலையில் கவிதாவின் பெற்றோர், தங்கள் கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது கணவர் ரேவந்த் மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.

இந்தநிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதில் கத்தியால் கழுத்தை அறுக்கப்படுவதற்கு முன்பு, கவிதாவின் வயிற்றில் 2 மயக்க ஊசி போடப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டு இருந்தது. மேலும் ரேவந்த் டாக்டர் என்பதால், அவர் தான் கவிதாவுக்கு மயக்க ஊசி போட்டு அதன்பின்னர் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து காவல்துறையினரின் பார்வை ரேவந்த் மீது திரும்பியது. மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் ரேவந்த்தும், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்த பேஷன் டிசைனரான ஹர்சிதா என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். ஆனால் ரேவந்த், கவிதாவையும், ஹர்சிதா பெங்களூருவில் பி.எம்.டி.சி பஸ் டிரைவராக இருக்கும் சுதீந்திராவையும் திருமணம் செய்து கொண்டனர். ஹர்சிதாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஹர்சிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது சுதீந்திரா தனியாக வாழ்ந்து வந்தார். இதனிடையே திருமணத்திற்குப் பின்னரும் ரேவந்தும், ஹர்சிதாவும் பேசி பழகி வந்தனர். நாட்கள் செல்ல செல்ல அதுவே தகாத உறவாக மாறியது.  ஹர்சிதாவை சந்திக்க ரேவந்த் அடிக்கடி பெங்களூருவுக்கு சென்று வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் கணவனின் காதல் விவகாரம் குறித்து அறிந்த கவிதா, ரேவந்த்தை கண்டித்து உள்ளார். ஆனாலும் ஹர்சிதாவுடனான கள்ளக்காதலை ரேவந்த் கைவிடவில்லை. இதனால் ரேவந்த், கவிதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே சம்பத்தன்று கவிதாவை ரேவந்த் ஒரு நகைக்கடைக்கு அழைத்துச் சென்று அவருக்கு நகை வாங்கி கொடுத்து உள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த உடன் ஹர்சிதாவுடன் இருக்கும் தொடர்பை கைவிடும்படி ரேவந்திடம், கவிதா கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது கடும் ஆத்திரத்திலிருந்த ரேவந்த், மனைவியைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி  2 மயக்க ஊசியை எடுத்து கவிதாவின் வயிற்றில் போட்டு உள்ளார். இதனால் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அதன்பின்பு கவிதாவின் கழுத்தைக் கத்தியால் அறுத்து கொடூரமாகக் கொலை செய்து உள்ளார். கொலையிலிருந்து தப்பிப்பதற்காக வீட்டிலிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு மகனையும், 7 மாத குழந்தையையும் தூக்கிக் கொண்டு தனது கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.

நகைக்காகத் தான் இந்த கொலை நடந்துள்ளது எனப் போலீசை நம்ப வைப்பதற்காக இந்த நாடகத்தை ரேவந்த் நடத்தியுள்ளார். இதையடுத்து ரேவந்த்தை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்த ரேவந்த் தலைமறைவானார். இதற்கிடையே பண்டிகொப்பலு என்ற கிராமத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக கடூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்குச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தவர், டாக்டர் ரேவந்த் என்பதும், மனைவியை கொலை செய்த தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்த அவர், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனிடையே ரேவந்த் தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்த அவரது முன்னாள் காதலி ஹர்சிதா பெங்களூரு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகாத உறவால் மனைவியைக் கொன்ற டாக்டர் தற்கொலை செய்தது பற்றி அறிந்த முன்னாள் காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரேவந்த் தனது மனைவியுடன் சண்டை போடும் போதெல்லாம், உங்களின் சபலத்தால் குடும்பம் ஒரு நாள் சிதைந்து போகப் போகிறது எனக் கூறுவது உண்டு. அந்தவகையில் ரேவந்த்-கவிதாவின் 2 குழந்தைகளும், ஹர்சிதாவின் குழந்தையும் தற்போது அனாதையாக நிற்பது தான் வேதனையின் உச்சம்.

CRIME, MURDER, SUICIDEATTEMPT, BENGALURU, KARNATAKA, KADUR MURDER, COMMITS SUICIDE, DENTIST