மாறி மாறி மோதிக் கொண்ட ரோப் கார்கள்.. 20 மணி நேரமாக.. சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள்.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலம், தியோகர் மாவட்டத்தில், திரிகுட் மலைப்பகுதி அருகே பாபா பயத்யநாத் கோவில் ஒன்று அமைந்துள்ளது.
மேலும், இந்த மலைப்பகுதியில் சென்று வர ரோப் கார்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தான், திடீரென இரண்டு ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளாதாகவும், சுமார் 40 க்கும் மேற்பட்டோர் வரை, ரோப் காரில் சிக்கித் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்றுள்ள மீட்புப் படையினர், ரோப் காரில் சிக்கித் தவிக்கும் மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரை பத்திரமாக அவர்கள் மீட்டுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு தான் காரணமா?
இரண்டு இந்திய விமான படைகளின் ஹெலிகாப்டர்கள் உதவியுடன், இந்திய வான்படை அதிகாரிகளும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாபா பயத்யநாத் கோவிலுக்கு சென்று விட்டு, பக்தர்கள் திரும்பி வரும் போது, இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 14 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கேபிள் கார்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருந்த போதும், விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி சரிவர தெரியவில்லை.
அதே போல, விபத்து ஏற்பட்ட உடன், ரோப் கார் மேலாளரும், பிற ஊழியர்களும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, விபத்துக்கு பின்னர் ஒரு தம்பதியினர் கீழே குதித்ததன் பெயரில், அவர்களுக்கு காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஊர் மக்களும் உதவி
தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து, அக்கிராம மக்களும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் அனைத்தும், துணை கமிஷனர் மஞ்சுநாத் பஜந்த்ரி மற்றும் எஸ்.ஐ. சுபாஷ் சந்திரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்று வருகிறது. கள நிலவரம் குறித்து துணை கமிஷ்னர் மஞ்சுநாத் பஜந்த்ரி பேசுகையில், "இங்குள்ள நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. சிலர் இன்னும் ரோப் காரில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து சுற்றுலா பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து, உள்ளூர் மக்களும் உதவி செய்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நீண்ட செங்குத்தான ரோப்வே இது தான் ஜார்கண்ட் சுற்றுலா துறை தெரிவித்து இருக்கிறது. மேலும், இந்த ரோப்வே, பாபா பயத்யநாத் கோவிலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மொத்தம் 766 மீட்டர் நீளமும், மலைப்பகுதியியல் மட்டும் 392 மீட்டர்கள் உயரமும் உள்ளது.
அதே போல, இந்த ரோப் காரில் மொத்தம் 25 கேபின்கள் உள்ள நிலையில், ஒவ்வொன்றிலும் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்