சர்ச்சைக்குரிய வார்த்தை... மன்னிப்புக் கோரிய ஜக்கி வாசுதேவ்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் மாணவரை 'தாலிபான்' என அழைத்ததற்குக் கண்டனம் எழுந்ததை அடுத்து ஜக்கி வாசுதேவ் மன்னிப்புக் கோரியுள்ளார். 

சர்ச்சைக்குரிய வார்த்தை... மன்னிப்புக் கோரிய ஜக்கி வாசுதேவ்...

ஈசா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது அவரும் மாணவர் பிலாலும் உரையாடினர். அந்த உரையாடலின்போது ஜக்கி வாசுதேவ் பிலாலை பார்த்து 'இவன் ஒரு பக்கா தாலிபான்காரன்' எனத் தெரிவித்ததாக வீடியோ ஒன்று வெளியானது.

இந்த வீடியோவிற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்  மாணவர் அமைப்பு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அத்துடன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஜக்கி வாசுதேவ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் 'இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து விஷயங்களும் காண்பிக்கப்படவில்லை. நான் 'தாலிபான்' என்ற சொல்லை மிகவும் உற்சாகமானவன் என்னும் அர்த்தத்தில் கூறினேன். அந்த வார்த்தையை எந்த உள்நோக்கத்துடனும் தெரிவிக்கவில்லை. அதேபோல 'தாலிபான்' என்ற சொல்லுக்கு அரபு மொழியில் தீவிரமான மாணவர் என்று அர்த்தம். இந்த நோக்கத்தில்தான் நான் விளையாட்டுத்தனமாக பிலாலை குறிப்பிட்டேன்'.

'இந்த விவகாரம் நான்  லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மாணவர் அமைப்பு ஆகியவற்றிற்கு எனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார். 

எனினும் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மாணவர் அமைப்பு, இவ்விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் 'இந்த வீடியோ எங்களால் எடிட் செய்யப்பட்டது அல்ல. இந்தியாவில் 'தாலிபான்' நல்ல அர்த்தத்தில் உபயோகப்படுத்துவதை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. சமூகத்தில் பெரிய இடத்திலுள்ள நபர்கள் இதுபோன்ற சர்ச்சைக்குரியப் பேச்சுகளை தவிர்க்க வேண்டும். அத்துடன் மதம் தொடர்பான கருத்துக்களை தவிர்க்க வேண்டும்' என பதிவிட்டுள்ளது.

JAGGIVASUDEV, LSE, APOLOGY, TALIBAN, BILAL, STUDENTUNION