'சகஜநிலை' திரும்பி மக்கள் கைகளில் எப்போது 'பணம்' புழங்கும்?... விளக்கம் அளித்த 'நிதித்துறை' முன்னாள் இணையமைச்சர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதையும் புரட்டி போட்டிருக்கும் கொரோனா தொற்றில் இருந்து எப்போது மீள்வோம்? எப்போது மீண்டும் சகஜநிலை திரும்பும்? மக்கள் கைகளில் மீண்டும் சாதாரணமாக பணம் எப்போது புழங்கும்? என்ற கேள்வி உலகம் முழுவதும் உள்ள மக்களிடத்தில் நிலவுகிறது. ஆனால் அதற்கான தெளிவான ஒரு பதிலை யாரும் இதுவரை அளிக்கவில்லை. ஏனெனில் உலக பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கி போட்டிருக்கும் கொரோனாவுக்கு இன்னும் எந்த நாடும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. தடுப்பூசி கண்டறியவே இன்னும் 6 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. அப்படியே தடுப்பூசி கண்டறியப்பட்டாலும் கூட சகஜநிலை திரும்ப எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்பது யாருக்கும் தெரியாது.
இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹாவுடன் காணொலிக் காட்சி மூலம் ஒரு கலந்துரையாடலுக்கு சென்னை இன்டர்நேஷனல் சென்டர் ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில் நிதித்துறை இணையமைச்சராக இருந்தவர், டெல்லி, ஐஐடி, ஹார்வர்டு போன்ற கல்வி நிலையங்களில் பயின்றவர் என பல்வேறு சிறப்புகள் இவருக்கு உண்டு. அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ''இப்போது நம் முன்னே இருக்கும் கேள்விகள்... இது எப்போது முடிவுக்கு வரும்..? மக்கள் பழையபடி எப்போது வேலைக்குப் போவார்கள்; பொருட்களை வாங்குவார்கள்; நின்றுபோயிருக்கும் உற்பத்தி எப்போது வேகமெடுக்கும்; எல்லோர் கைகளிலும் எப்போது பணம் புழங்கும்? என்பது தான்.
கொரோனாவுக்கான மருந்துகள் இப்போது சோதனையில் இருக்கின்றன. இவை எல்லாவிதமான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளையும் தாண்டி மக்களுக்குக் கிடைக்க, மேலும் ஆறு மாதங்கள் ஆகும். மருந்து வந்துவிட்டால் மட்டும் இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வந்துவிட முடியாது. இந்த தொற்று பரவாமல் இருக்கத் தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். இதை உருவாக்குவதில் இப்போது விஞ்ஞானிகள் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். ஆனால் இவை மக்களுக்குக் கிடைக்க, 18 மாதங்களில் இருந்து 25 மாதங்கள்வரை ஆகும்,'' என தெரிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால் இந்த பொருளாதார தேக்கத்தில் இருந்து உலகம் மீள்வதற்கு இன்னும் குறைந்தது 2 ஆண்டுகளாவது தேவைப்படும் என கூறப்படுகிறது.