‘காருக்குள்ள இவ்ளோ நேரம் என்ன பண்றாரு?’.. சந்தேகத்தில் செல்போனை ‘செக்’ பண்ணிய மனைவி.. கடைசியில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபேஸ்புக் மூலம் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி நபர் ஒருவர் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய பாஸ்கர். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தனக்கு திருமணமான தகவலை மறைத்து விட்டு பேஸ்புக்கில் பல பெண்களுடன் அவர் பேசி வந்துள்ளார். குறிப்பாக ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை குறிவைத்து பழகி வந்துள்ளார்.
பேஸ்புக் மூலம் பெண்களிடம் நட்பாக பழகி பின்னர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனை அடுத்து அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி திருமணம் வரை சென்று, நகை மற்றும் பணத்துடன் தப்பியுள்ளார். முதல் மனைவியை தவிர 4 கணினி மென்பொறியாளர் பெண்களை பேஸ்புக் மூலமாக காதலித்து கல்யாணத்துக்கு பிறகு பணம், நகையுடன் தப்பிச் சென்றுள்ளார்.
அதில் 6-வதாக ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலை பகுதியை சேர்ந்த சௌஜன்யா என்ற இளம்பெண்ணையும் இதேபோல் காதலித்து கல்யாணம் செய்துள்ளார். இந்த நிலையில் விஜய பாஸ்கர் அடிக்கடி காருக்குள் சென்று நீண்ட நேரமாக செல்போனில் பேசுவதை சௌஜன்யா பார்த்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் விஜய பாஸ்கரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் சிவானி என்ற பெண்ணிடம் விஜய பாஸ்கர் வீடியோ காலில் பேசியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் சௌஜன்யா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வந்த உறவினர்கள் விஜய பாஸ்கரை அடித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் பேஸ்புக் மூலம் பழகி 6 பெண்களிடம் செய்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை அடுத்து குடும்பத்தினர் முன்னிலையில் விஜய பாஸ்கர் தனது மனைவி சௌஜன்யாவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய பாஸ்கர் குறித்து காவல் நிலையத்தில் சௌஜன்யாவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விஜய பாஸ்கரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விஜய பாஸ்கரிடம் ஏமாந்த பெண்களிடம் புகார்களை பெற போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பேஸ்புக் மூலம் பழகி திருமணமானதை மறைத்து 6 இளம்பெண்களை ஐடி ஊழியர் ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்