‘கிரிக்கெட் போட்டிகள் ரத்து’.. ‘பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. என்ன நடக்கிறது காஷ்மீரில்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஜம்மு-காஷ்மீரில் பதட்டமான சூழல் நிலவுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீர் எல்லைப் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் தரிசனம் முடித்த பக்தர்கள் விரைவாக வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் காஷ்மீரில் நடைபெற இருந்த துல்தீப் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை மற்றும் ராஞ்சி கோப்பை உள்ளிட்ட போட்டிகள் ரத்து செய்யப்பட்டிள்ளன. இதற்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் உட்பட 100 -க்கும் மேற்பட்ட வீரர்கள் காஷ்மீரில் பயிற்சி பெற்றுவந்தனர். இதனை அடுத்து காஷ்மீர் வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் உடனே வெளியேற பாதுகாப்புதுறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் நள்ளிரவில் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். உதம்பூர், கதவா, தோடா உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.