நாடு முழுவதும் குறுகிய தூர ரயில் ‘கட்டணம்’ உயர்வு.. என்ன காரணம்..? ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் குறுகிய தூர ரயில்களின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் போது, நாடு முழுதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டவுடன், சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதில், முதலில் நீண்ட துார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது குறுகிய தொலைவு ரயில்களும், சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் குறுகிய தொலைவு சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் தொடர்கிறது. சில மாநிலங்களில் திடீரென உயர்ந்துள்ளது. இதனால் வீண் ரயில் பயணத்தை தடுக்கவே, சற்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான கட்டணம், இந்த சிறப்பு ரயில்களுக்கு வசூலிக்கப்படுகிறது. தேவையில்லாத பயணத்தை தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புறநகர் ரயில் சேவைக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்