'மாட்டு சாணம் போதும், கொரோனா காலி'... 'ஐயோ, அதிலிருக்கும் ஆபத்து'... எச்சரிக்கையோடு மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா சிகிச்சைக்கு மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதற்கு ஏற்றார் போலப் பல போலி தகவல்கள் வாட்ஸ்ஆஃப்பிலும் பரவி வருகிறது. இந்த ஒரு மருந்து போதும், கொரோனாவை நிச்சயம் குணப்படுத்தி விடலாம் என்ற ரீதியில் பலரும் பல தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கடும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள சம்பவம் தான் மாட்டுச் சாண சிகிச்சை.
இந்திய மாநிலம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்தாக மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை, மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக் கொண்டு சிகிச்சை பெறுவதால் உடலில் கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
எந்த ஒரு அறிவியல் பூர்வமான தகவலும் இல்லாமல் இதுபோன்ற ஆபத்தான செயலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக இந்திய மருத்துவ நிபுணர்கள் கடும் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்கள். அதில், ''மாட்டுச் சாணத்தைக் கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது வேறு பல நோய்களுக்கு வழிவகுக்கும் எனவும், மாட்டுச் சாணம் கொரோனாவுக்கு எதிரான செயல்திறனைக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரமும் ஏதும் இல்லை.
மேலும், "இது முழுக்க முழுக்க நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது" என்றும் "இந்த தயாரிப்புகளை உடலில் பூசிக்கொள்வதிலோ அல்லது உட்கொள்வதிலோ உடல்நல அபாயங்களும் உள்ளன என எச்சரித்துள்ளார்கள். அதோடு கொரோனாவிற்கு மருந்து என இதை இவர்கள் பூசிக் கொள்ளும் நிலையில், இதன் மூலம் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பிற நோய்கள் பரவக்கூடும் அபாயம் இருப்பது தான் வேதனையின் உச்சம்.
ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அதற்கான உரியச் சிகிச்சையைப் பெறாமல் இதுபோன்று மாட்டுச் சாணத்தைப் பூசிக் கொள்வதால் கொரோனாவிலிருந்து விடுபடப் போவது இல்லை. அதே நேரத்தில் அந்த தொற்று மற்ற நபர்களுக்குத் தான் பரவும்.
எனவே கொரோனா வைரஸ் தொற்றை, தடுப்பூசிகளின் மூலமே கட்டுப்படுத்த முடியும். இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் மருத்துவர் ஜே.ஏ. ஜெயலால் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்