‘சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க’... ‘உதவிக்கரம் நீட்டப்படுமா?’... ‘இந்தியா கொடுத்த அதிரடி பதில்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், சீனாவில் உள்ள அந்நாட்டு மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே அரண்டு போய் உள்ள நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் சீனாவில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களில், 4 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார். சீனாவில் சிக்கியுள்ள அந்த மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று அண்மையில் பாகிஸ்தான் அரசு கூறியிருந்தது. இது அந்த நாட்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுது.
‘உகானிலிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுவிட்டார்கள். வங்கதேசமும் தம் மக்களை மீட்டுவிட்டது. நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மரணத்தை தழுவினாலும் கவலையில்லை என, பாகிஸ்தான் அரசு நினைக்கிறது. இந்தியர்களிடமிருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும்' என, பாகிஸ்தான் அரசை கடுமையாகக் குற்றம் சாட்டி பாகிஸ்தான் மாணவர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.
இதற்கிடையில், பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் தங்களை மீட்குமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ பற்றி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘இது குறித்து பாகிஸ்தான் அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அந்த மாணவர்களை மீட்பது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.