இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு ‘மீண்டும்’ நோய் தொற்று.. மருத்துவ அலுவலர் வெளியிட்ட முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டன. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் முதல்முறையாக பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவிக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சீனாவில் வூகான் மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சீனாவில் இருந்து கேரளா வந்த அவருக்குத்தான் முதன் முதலாக கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து அந்த மாணவிக்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்னர் இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.
The country's first #Covid positive case was a medical student who had arrived from Wuhan in #China to her hometown in Thrissur in January last year. One and a half years later she has once again turned positive, as per reports on Tuesday. pic.twitter.com/T7itGJB8Ur
— IANS Tweets (@ians_india) July 13, 2021
இந்த நிலையில் அந்த மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள திருச்சூர் மாவட்ட மருத்துவ அலுவலர் கே.ஜே.ரீனா, ‘அந்த மாணவி டெல்லிக்கு சென்று படிப்பதற்காக திட்டமிட்டிருந்தார். அதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது மாணவி உடல் நலத்தோடு உள்ளார்’ என அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்