“கொரோனாவுக்கு இறுதி நாள் குறிச்சாச்சு!”.. “ஆனா அதுக்கு நடுவுல, உச்சக்கு போகும்.. இவ்ளோ பேர் பாதிக்கப்படுவாங்க!”.. தேதிகளுடன் வெளியான ‘அடுத்த கட்ட’ ஆய்வு முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் கொரோனா வைரஸ் இந்தியாவில் 7.87 லட்சம் பாதிப்புகளைக் கடந்து அதன் உச்சநிலையை அடைந்து, பின்னர் சீராகக் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோயின் வீழ்ச்சியின் தொடக்கத்தை நாம் விரைவில் காண்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி, மும்பை மற்றும் புனேவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவின் சில நகரங்கள் ஏற்கனவே பகுதி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டுள்ளனவா என்கிற விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து விஞ்ஞான ரீதியான ஒருமித்த கருத்து இல்லை என்றாலும், சில வல்லுநர்கள் இதை நம்புகிறார்கள், மக்களிடையே ஆன்டிபாடிகள் உருவாகி, அவை COVID-19 நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
புனேவில் நடந்த செரோ கணக்கெடுப்பு படி, கணக்கெடுக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரின் உடலில் COVID-19 க்கான ஆன்டிபாடிகள் உருவாகியதாகக் காட்டியிருந்தது. இதனிடையே டைம்ஸ் ஃபேக்ட்-இந்திய கொரோனா வைரஸ் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமான மகாராஷ்டிராவில், செப்டம்பர் 14 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உச்சகட்டமாக 2.23 லட்சமாக இருக்கக் கூடும் என்றும், கர்நாடகாவில் ஆகஸ்ட் 28 ம் தேதிக்குள் கொரோனா உச்சத்தை எட்டலாம் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதே போல், பீகார் மற்றும் ஒடிசா முறையே செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 14 ஆகிய தேதிகளில் உச்சத்தை எட்டும் என்றும், அதே சமயம் உத்தரபிரதேசம் செப்டம்பர் 1 ஆம் தேதி உச்சத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அனைத்து முக்கிய மாநிலங்களைக் காட்டிலும், ஒடிசா அதன் உச்சத்தை எட்டிய கடைசி இடமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் டெல்லி ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள நிலையில், முறையே ஜூலை மற்றும் ஜூன் மாதங்களில் உச்சத்தை எட்டியுள்ளதாகவும் ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவும் ஆகஸ்டு முதல் வாரத்தில், உச்சத்தை எட்டியுள்ளதாகவும் அறிக்கையின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நெட்வொர்க் மற்றும் ஆராய்ச்சி மற்றும் தரவு நிறுவனமான புரோடிவிட்டி ஆகியவற்றின் கூட்டு முயற்சியான டைம்ஸ் ஃபேக்ட்-இந்திய கொரோனா வைரஸ் ஆய்வறிக்கையின் சமீபத்திய கணிப்புகளின்படி, கோவிட் -19 தொற்றுநோய் இரண்டு வாரங்களில் இந்தியாவில் உச்சத்தை எட்ட உள்ளது.
'அதிகபட்சமாக' செப்டம்பர் 2-ம் தேதி முதல் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 7.87 லட்சமாக இருக்கக் கூடும் என்றும், செப்டம்பர் 16 வரை நீடிக்கும் இந்த தொற்றுநோயின் ‘இறுதி தேதி’ டிசம்பர் 3 ஆம் தேதியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி 2020 வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 28.37 லட்சம் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன, இவர்களுள் COVID-19லிருந்து ஏற்கனவே 21 லட்சம் பேர் மீண்டுள்ளதை அடுத்து தற்போது 6.86 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்தியா உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிக தினசரி கொரோனா பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, அமெரிக்கா (55.3 லட்சம் பாதிப்புகள்), பிரேசில் (மொத்தம் 34.6 லட்சம் பாதிப்புகள்) ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக இந்தியா தொடர்ந்து உள்ளது. இருப்பினும், இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் பிரேசில் இரண்டையும் விட குறைவாக உள்ளது. இது மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளை விட மிகக் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்