"பிரதமர் எப்படி இதை யோசிச்சார்?.. வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்..".. இளையராஜா புகழாரம்.. கைகூப்பி நன்றி சொன்ன மோடி.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய அரசு சார்பில், இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற உணர்வுடன் முன்னிலைப்படுத்தும் விதமாக காசியில் தமிழ் சங்க சங்கம நிகழ்ச்சி, நடைபெற்றது.

"பிரதமர் எப்படி இதை யோசிச்சார்?.. வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்..".. இளையராஜா புகழாரம்.. கைகூப்பி நன்றி சொன்ன மோடி.!

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த இந்நிகழ்ச்சியை, வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் சென்னை ஐஐடி &  பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தியுள்ளன. ஒரு மாதம் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க, நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.

Ilayaraja praises PM Modi Kasi Tamil Sangamam Speech

இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இணை அமைச்சர் எல்.முருகன், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Ilayaraja praises PM Modi Kasi Tamil Sangamam Speech

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா எம்.பி, “காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை இங்கே எல்லோரும் விளக்கிச் சொன்னார்கள். இங்கு தான் பாரதியார் இரண்டு வருடம் படித்திருக்கிறார். இங்கு அவர் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை நம்முடைய நாட்டுக்கும் எடுத்துரைத்திருக்கிறார். காசி நகர் புலவர்களின் பேச்சுகளை பாரதி நேரில் கண்டிருக்கிறார்.

‘காசியில் கேட்க ஒரு கருவி செய்வோம்’ என இந்தியாவில் முன்னேற்றங்கள் இல்லாத சூழ்நிலையிலேயே பாரதி பாடி இருக்கிறார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்று நதியணைப்பு திட்டம் பற்றி பாரதியார் அன்றே தம் 22 வயதில் பாடி சென்று இருக்கிறார். பாரதியார் தன்னுடைய 9 முதல் 11வது வயது வரை இங்கு கற்று இருக்கிறார். அறிவை பெற்றிருக்கிறார் என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அரிய ஒரு விஷயமாக இருக்கிறது. நீங்கள் இதுவரை அறியாத, குறிப்பிடப்படாத ஒரு விஷயத்தையும் நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

Ilayaraja praises PM Modi Kasi Tamil Sangamam Speech

இங்கு கபீர் இரண்டு அடிகளில் தோகாவலியை பாடியிருக்கிறார். அங்கு தமிழில் திருவள்ளுவர் இரண்டு வரிகளில் திருக்குறளை இயற்றினார். தோகாவில் எட்டு சீர்கள் திருக்குறளில் ஏழே சீர்கள் தான் இருக்கின்றன. முதலடியில் 4 சீர்கள், இரண்டாம் அடியில் 3 சீர்கள். இந்த நிகழ்வுகள் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தோகாவலியில் ஆன்மீகம் பற்றி அவர் பாட, திருக்குறளில் உலகவியல் பற்றி 1331 பாடல்களாக பாடப்பெற்றுள்ளது” என்று கூறினார்.

மேலும் பேசியவர்,  “இதேபோல் யாரும் குறிப்பிடாத விஷயத்தை இங்கே சொல்கிறேன். கர்நாடக சங்கீதத்தின் மாமேதை என்று அழைக்கப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இங்கே வந்து நிறைந்து, தேசாந்திரமாக பல பல பாடல்களை பாடியிருந்தவர், இங்கே கங்கையில் மூழ்கி எழுந்த போது அவர் கையிலே சரஸ்வதி தேவி வீணையை பரிசளித்ததுள்ளார்.

Ilayaraja praises PM Modi Kasi Tamil Sangamam Speech

அந்த வீணை இன்னும் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு இருப்பதையும் இங்கு நினைவு கூர்கிறேன். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த இந்த புண்ணிய பூமி காசி நகரில் காசி தமிழ் சங்கமத்தை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் நம்முடைய பிரதமர் அவர்களுக்கு எப்படி தோன்றியது என்பதை நான் இன்னும் வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு மோடியை பார்த்த இளையராஜா, தான் பேசிய இதே கருத்தை ஆங்கிலத்தில் சொல்ல, மேடையில் அமர்ந்திருந்த இணைய அமைச்சர் எல்.முருகனும் இது குறித்து மோடியிடம் எடுத்துரைத்தார்.

அப்போது பிரதமர் இளையராஜாவுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். அந்த நேரத்தில் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் புகழையும் தர வேண்டும், மென்மேலும் ஓங்குக” என்று பிரதமர் மோடியை வாழ்த்தி விடைபெற்றார் இளையராஜா.

ILAIYARAJA, MODI, KASI

மற்ற செய்திகள்