6 வருஷத்துல 17 பொண்ணுங்க குடும்பத்த ஏமாத்தி... கோடிக் கணக்கில் நடந்த 'மோசடி'... இந்த குடும்பங்கள் தான் அவனோட 'டார்கெட்'... அதிர்ச்சி தரும் 'ஃப்ளாஷ்பேக்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் முதாவத் ஸ்ரீனு நாயக். இவரை கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத் போலீசார், 17 பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏமாற்றி சுமார் 6 கோடி வரை மோசடி செய்ததற்காக கைது செய்தது.
பின்னர் ஸ்ரீனு எப்படி பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் தரப்பில் இருந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹைதராபாத் பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து, தன்னை ஒரு ராணுவ அதிகாரியாகவும், அந்த அறையை ராணுவ அலுவலகமாகவும் செயல்படுத்தி ஸ்ரீனு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல், தனது பெயரையும் ஸ்ரீனிவாஸ் சவுகான் என மாற்றி வைத்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஸ்ரீனு, உயர் படிப்பு படித்துள்ளதாக போலி சான்றிதழ்களை உருவாக்கியுள்ளார். மேலும், ராணுவ அதிகாரியாக உள்ளதாக போலி சான்றிதழையும் உருவாக்கியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்த ஸ்ரீனு, 2014 ஆம் ஆண்டு ஹைதராபாத் பகுதிக்கு வந்து தனக்கு ராணுவத்தில் வேலை கிடைத்ததாகவும், 67 லட்ச ரூபாய் பணத்தை தான் எடுத்து விட்டு வந்ததாகவும், மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், தனக்கு பெண் தேடுவதாக போலி ப்ரோஃபைல் ஒன்றை உருவாக்கி, தான் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். தங்களது மகள்களுக்கு இராணுவ அதிகாரிகளை மருமகனாக எதிர்பார்க்கும் குடும்பத்தை இலக்காக வைத்த ஸ்ரீனு, அந்த குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தனக்கு வரதட்சணை வேண்டாம் என கூறி அவர்களை முதலில் ஈர்க்கச் செய்துள்ளார்.
அதன் பிறகு, அந்த குடும்பத்தினரிடம் நெருங்கிப் பழகும் ஸ்ரீனு, தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி அவர்களிடம் இருந்து அதிக தொகையை வாங்கியுள்ளார். தெலங்கானா பகுதியில் ஒரு குடும்பத்தினரிடம் இருந்து 56 லட்சம் வரை பெற்றுக் கொண்ட ஸ்ரீனு, வாரங்கல் பகுதியில் ஒரு குடும்பத்தினரிடம் இருந்து சுமார் 2 கோடி வரை ஏமாற்றி பறித்துள்ளார்.
இப்படி மொத்தமாக சுமார் ஆறரை கோடி வரை 17 பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து ஏமாற்றி பெற்றுக் கொண்ட ஸ்ரீனு, ஹைதராபாத் பகுதியில் ஒரு பெரிய பங்களா, 3 சொகுசு கார்கள் ஆகியவற்றுடன் வசதியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை வேறொரு பெண்ணின் குடும்பத்தை சந்திக்க வேண்டி காரில் சென்று கொண்டிருந்த ஸ்ரீனுவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து போலி துப்பாக்கி, 3 ராணுவ உடைகள், போலி ராணுவ ஐடி கார்டு மற்றும் போலி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள், 4 மொபைல் போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த ஆறு ஆண்டுகளில் பல பெண்களை ஏமாற்றி மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஹைதராபாத் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்